மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்

மோடி அரசின் தொலைநோக்கால் சாதனை படைக்கிறது தமிழகம்

தமிழகத்தில், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது.

***

“நீ என்னவாகப் போகிறாய்?” என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகளின் பதில் “டாக்டராவேன்” என்பதாகத் தானிருக்கும்.

அந்த அளவுக்கு, நமது நாட்டில் மருத்துவர் பணி மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது. உயிர் காக்கும் உன்னதப் பணி என்பதாலோ என்னவோ, இந்த எண்னம் நம் எல்லோரிடையேயும் பதிந்திருக்கிறது.

ஆனால், எல்லோராலும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடிவதில்லை. ஏனெனில் மருத்துவப் படிப்பு பிற படிப்புகள் போல அதிகமானோருக்குக் கற்பிக்கப்படுவதில்லை. மனித வாழ்வைக் காக்கும் துறை என்பதால், கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கான தகுதி உள்ளவர்களையே இந்தப் படிப்பில் சேர்ப்பது வழக்கம். மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

எனினும், கல்வி என்பது இந்தியாவில் வசதியானோருக்கு வேறாகவும் பிறருக்கு வேறாகவும் இருந்து வந்தது. குறிப்பாக பணம் படைத்தவர்கள் பல கோடிகளைச் செலவிட்டு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படித்து டாக்டர் ஆக முடிந்தது; இதனால் தகுதியற்றோரும் மருத்துவராக முடிந்தது.

இந்த வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சி, உச்சநீதிமன்ற உத்தரவால், 20132 இல் ‘நீட்’ தேர்வாக உருவெடுத்தது. இன்று தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெறுவோரே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது, மருத்துவக் கல்வியில் சமத்துவத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

***

உலக சுகாதார நிறுவனத்தின் 2021 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மருத்துவர்: நோயாளிகள் விகிதம் 1:834 ஆக இருக்கிறது. அதன் எதிர்பார்ப்பு, ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்பதாகும். இதில் இந்தியா 83 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது. இத்தகவலை, கடந்த டிசம்பரில் மக்களவையில் தெரிவித்திருக்கிறார் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார்.

தற்போது நம் நாட்டில் 13.02 லட்சம் அலோபதி மருத்துவர்கள் பதிவு பெற்ற மருத்துவர்களாக உள்ளனர் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம். இவர்கள் தவிர, நாடு முழுவதும் 5.65 லட்சம் பாரம்பரிய மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய முறைகளில் சிகிச்சை அளிப்பவர்கள்.

ஆனால், நாட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவை சென்று சேர வேண்டுமானால், நமது மருத்துவத் துறை மேலும் வளர்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கு மருத்துவக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

மருத்துவக் கல்வி என்று சொல்லும்போதே, அலோபதி என்ற மேற்கத்திய மருத்துவ முறைதான் அடிப்படையாக இருந்து வருகிறது. நமது நாட்டில் இதனைப் பயில ‘எம்பிபிஎஸ்’ (MBBS) பட்டப் படிப்பு உள்ளது. வேறு பல மருத்துவப் படிப்புகள் இருந்தாலும், எம்பிபிஎஸ் தான் அலோபதி படிப்பின் அடிப்படைப் பட்டப் படிப்பு. இதனைக் கற்பிக்கும் கல்லூரிகளே மருத்துவக் கல்லூரிகள்.

நாடு முழுவதும் சேர்த்து 1965 வரை 8 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன என்று இப்போது சொன்னால் வியப்பாக இருக்கும். நமது நாட்டில் 1980 வரை மருத்துவக் கல்வி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கே சென்று வந்தது. 1980களில் தனியார் கல்லூரிகள் இத்துறையில் அனுமதிக்கப்பட்ட பிறகே இத்துறையில் பெரும் மாற்றங்கள் நிகழத் துவங்கின. 2000க்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக அதிகரித்தது.

மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் இந்திய மருத்துவக் குழுமத்தால் (ஐஎம்சி) கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் மூலமாக, தேசிய மருத்துவ ஆணையமாக ஐஎம்சி மாற்றப்பட்டது. இதன்கீழ், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியாரால் ஆணைய அனுமதி பெற்று நடத்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்குகின்றன.

***

பலவிதமான மருத்துவக் கல்வி

மருத்துவக் கல்வி என்றால் எம்பிபிஎஸ் மட்டுமல்ல, பல் மருத்துவம் தொடர்பான பிடிஎஸ் படிப்பு, ஆயுஷ் படிப்புகள் (சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம்) ஆகியவையும் மருத்துவப் படிப்புகளே. இவற்றில் சேரவும் நீட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள் 19 உள்ளன. இவற்றில் அரசுக் கல்லூரி 1. இவற்றில் உள்ள பிடிஎஸ் (BDS) இடங்களின் எண்ணிக்கை 1,860. அதேபோல அரசு ஆயுஷ் கல்லூரிகளின் எண்ணிக்கை (சித்தா- 3, ஆயுர்வேதம்- 1, யுனானி- 1, ஹோமியோபதி- 1, யோகா- இயற்கை மருத்துவம்- 2) என எட்டாகும். இவற்றில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கை 470. இவை தவிர, தனியார் ஆயுஷ் கல்லூரிகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்தே மருத்துவக் கல்வி இடங்கள் பட்டியலிடப்படுகின்றன.

***

நமது நாட்டின் மக்கள்தொகை  2020இல் 138 கோடியை எட்டிவிட்டது. இது மேலும் பெருகவே வாய்ப்பு. இத்தகைய நிலையில், நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டுமானால், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2000 ஆண்டு வரை, இந்தக் கண்ணோட்டத்திலான செயல்பாடுகளை முந்தைய அரசுகள் எடுக்கவில்லை. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரான பிறகே, மருத்துவக் கல்வி குறித்த நமது அரசின் சிந்தனை மாறியது.

2021 இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் 596 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 285. இந்த கல்லூரிகள் மூலமாக சுமார் 85,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும்.

இந்த மருத்துவக் கல்லூரிகளில், 2019 முதல் 2021 வரையிலான மூன்றாண்டுகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 124. அதிலும், 2021இல் மட்டுமே 66 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. எனில், நமது மருத்துவக் கல்வியின் வளர்ச்சி அண்மைக்காலமாக புலிப்பாய்ச்சல் கண்டுள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த மூன்றாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த மோடி அரசின் தொலைநோக்குக் கண்ணோட்டமே இந்த மாற்றத்துக்குக் காரணம்.

கடந்த டிச. 8 இல் உ.பி. மாநிலம், கோரக்பூரில் பல்வேறு நலப்பணிகளைத் துவக்கிவைத்த பிரதமர் மோடி, “நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ சேவையை எளிதாகப் பெற வேண்டும். அதற்காக, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்படும்” என்று அறிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 748. இவற்றில் தற்போது 285 இடங்களில் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பிரதமரின் கனவு நிறைவேறினால், மருத்துவக் கல்வி என்பது தகுதியுள்ள அனைவருக்கும் எட்டும் கனி ஆகிவிடும்.

***

மருத்துவ ஆராய்ச்சியில் மைல்கல்!

மருத்துவக் கல்வியில் உயர் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தான் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்- AIIMS) நிறுவனம். தில்லியில் 1952இல் நிறுவப்பட்ட எய்ம்ஸ், மருத்துவக் கல்வியின் அதிநவீன உயர் ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற நிறுவனம். இங்கும் மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. நீட் தேர்வில் உச்ச மதிப்பெண் பெறுவோர் இங்கு சேர முடியும்.

1998 முதல் 2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க முடிவெடுத்தார். போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் புதிய எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அமைக்கும் பணிகளை வாஜ்பாய் அரசு 2003இல் துவக்கியது. அதன் விளைவாக, இவை 2012இல், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் துவங்கப்பட்டன. தவிர, ரேபரேலியில் ஒரு எய்ம்ஸ் 2013இல் துவக்கப்பட்டது.

2014இல் நரேந்திர மோடி அரசு அமைந்தவுடன் எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களை அதிகரிக்கும் பணி மீண்டும் முடுக்கி விடப்பட்டது. அதன்மூலமாக, இந்த 7 ஆண்டுகளில் மங்களகிரி, நாகபுரி, கோரக்பூர், கல்யாணி, பதிண்டா, கௌஹாத்தி, விஜய்பூர், தேவ்கர், ராஜ்காட், பீபி நகர், பிலாஸ்பூர் ஆகிய 11 இடங்களில் எய்ம்ஸ் துவங்கப்பட்டுள்ளது. தற்போது 19 இடங்களில் எய்ம்ஸ் செயல்படுகிறது. இவற்றின் மூலமாக சுமார் 1400 மாணவர்கள் எம்பிபிஎஸ் பயில முடியும். புதுவையில் உள்ள மத்திய நிறுவனமான ஜிப்மரில் 220 பேர் பயில முடியும்.

மேலும், மதுரை (தமிழகம்), காஷ்மீர், தர்பங்கா, மனேத்தி ஆகிய 4 இடங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 5 எய்ம்ஸ்களை நிறுவும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. 2025 பிப்ரவரியில் நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்பது மோடி அரசின் செயல்திட்டம்.

***

தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 இடங்களில் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடனும், ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 4 இடங்களில் தலா 100 எம்பிபிஎஸ் இடங்களுடனும் 11 அரசு மருத்துவக் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கை 1,450 அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார் மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்ற ஆண்டு அக். 25 இல் உ.பி. மாநிலத்தில் ஒரே நாளில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதுவே மருத்துவக் கல்வியில் மிகப் பெரிய முன்னெடுப்பாக இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக, இந்த ஆண்டு ஜன. 12இல் தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கி வைக்க வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. நாட்டிலேயே இதுவரை நிகழ்ந்திராத சாதனை இது.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு நிகழ்த்திய சாதனை இது. ஒவ்வொரு கல்லூரியும் சுமார் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய மாநில சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரிமை கொண்டாடுவதில் பொருள் உள்ளது. ”அதிமுக அரசின் தீவிர முயற்சிகளின் விளைவே இந்தச் சாதனை” என்கிறார் இவர்.

ஆனால், தமிழகத்தில் ஆளும் திமுக இதற்கு பெருமை கொள்ளத் துடிக்கிறது. உண்மையில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு தான். மருத்துவக் கல்லூரி அமைக்க முன்முடிவுகளை எடுத்தல், அதற்கான நிதியை மத்திய அரசிடம் பெறுதல் (மத்திய அரசு: 60 %, மாநில அரசு: 40 %), நிலம் கையகப்படுத்துதல், கல்லூரிக் கட்டடங்களை அமைத்தல், மருத்துவக் கல்லூரிக்கான கருவிகளை கொள்முதல் செய்தல்,  மருத்துவர் தேர்வு உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளை முந்தைய அரசு வேகமாகச் செய்ததால் தான், இது சாத்தியமானது.

இந்தக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜன. 12இல் நிகழ உள்ள அரசு விழாவில் பிரதமர் மோடி துவக்கிவைக்க உள்ளார். இவ்விழாவில் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா, மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடி வருகை தரும் முதல் அரசு விழா இதுவாகும்.

தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 26 (மொத்த இடங்கள்: 3,725), தனியார் மருத்துவக் கல்லூரிகள் 26 (மொத்த எம்பிபிஎஸ் இடங்கள்: 4,350), அரசு உதவி பெறும் கல்லூரி 1 (100 இடங்கள்) ஆகியவை உள்ளன. இவை அல்லாது நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கூடுதலாக 11 அரசுக் கல்லூரிகள் சேர்கின்றன. மேலும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய அளவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறுகிறது.

தமிழகம் (69 கல்லூரிகள்- 10,375 இடங்கள்), உ.பி. (67 கல்லூரிகள்- 6,928 இடங்கள்), கர்நாடகம் (61 கல்லூரிகள்- 9,545 இடங்கள்), மகாராஷ்டிரம் (59 கல்லூரிகள்- 9,200 இடங்கள்), தெலுங்கானா (34 கல்லூரிகள்- 5.340 இடங்கள்) என மாநிலங்களின் வரிசையில் முதலிடம் பெறுகிறது தமிழகம். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 12 % தமிழகத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ குழுமம் தெரிவித்துள்ளது (2021 நிலவரம்).

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டமே இல்லாத நிலையை நோக்கி தமிழகம் விரைந்து கொண்டிருக்கிறது.

.

பட விளக்கம்மதுரை- தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி (நாள்: 27.01.2019).

***

Leave a Reply

Your email address will not be published.