அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட 325 தூய்மை பணியாளர்களுக்கு மாற்றுப் பணி மாநகராட்சி நடவடிக்கை.

கோவை கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட, 325 துாய்மை பணியாளர்களுக்கு மீண்டும் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.

இது, மற்ற தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கோவை மாநகராட்சியில் நேரடி நியமன முறையில், துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கல்வித்தகுதி தேவையில்லை என கூறியதால், பட்டம் படித்தவர்களும் விண்ணப்பித்து, வேலை பெற்றனர். அவர்களில், 325 பேர், துாய்மை பணி செய்யாமல், மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் வார்டு, மண்டல அலுவலகங்களில் மாற்றுப்பணி செய்தனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாற்றுப்பணியில் இருப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. துாய்மை பணியாளராக வேலைக்குச் சேர்ந்து, அலுவலக உதவியாளர்களாகவும், கார், லாரி டிரைவர்களாகவும் பணியாற்றி வந்தவர்களை,

மீண்டும் துப்புரவு பணிக்கே திருப்பி அனுப்பினர்.துாய்மை பணிக்கு தேர்வு செய்து, மாற்றுப் பணி செய்து கொண்டிருந்த, 325 பேரும் வார்டுகளுக்கு குப்பை அள்ளும் வேலைக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்களில் பலர் முரண்டு பிடித்ததால், கொரோனா பரவல் தடுப்பு பணி, கொசு ஒழிப்பு பணிக்கு அனுப்பப்பட்டனர். தினமும் காலை வீடு வீடாகச் சென்று ‘அபேட்’ மருந்து ஊற்றும் பணியை சிலர் செய்து வருகின்றனர்.

325 பேரில் பலரும், வார்டு வார்டாகச் சென்று வரி வசூலிக்கும் பணிக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.ஆனால், வாரிசு அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், சீனியாரிட்டியில் இருப்பவர்கள் பலரையும் மாற்றுப்பணிக்கு அனுப்ப உயரதிகாரிகள் தயங்குகின்றனர்.

குப்பை அள்ளும் பணியை, தொடர்ந்து செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டோருக்கு மட்டும் தொடர்ந்து சலுகை அளிப்பதாக, துாய்மை பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.