காஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்


நம் தேசத்தின் சிகரம் போன்ற காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த பண்டிட்கள் – இந்துக்கள் சம காலத்தில் அனுபவித்த இனப்படுகொலையைப் பற்றி முழுமையாகப் பேசும் முதல் திரைப்படம் இது. அவர்கள் அனுபவிக்க நேர்ந்த கொடுமைகள் ஏற்படுத்தும் வலி ஒரு பக்கம்; அந்தக் கொடுமைகளை நாம் துளியும் கண்டுகொள்ளாமல் இருந்த குற்ற உணர்ச்சி ஒருபக்கம்.

இஸ்லாமிய வன்முறை கும்பலும் அதன் அடிவருடிகளான அரசியல்கட்சிகளும், அதிகாரவர்க்கங்களும், ஊடகங்களும், அறிவுப்புலங்களும் பெரும்பான்மையாக இருக்கும் நம் சமூகத்தை எப்படியெல்லாம் முட்டாளாக்கிவருகிறது என்பது ஏற்படுத்தும் அவமானம் ஒரு பக்கம். இதுபோல் இனியும் நடக்காமல் தடுக்க நம்மால் எதுவுமே செய்ய முடியாதோ என்ற நிராதரவான நிலை ஒருபக்கம் என இந்தத் திரைப்படம் பல்வேறு உணர்ச்சிகளை ஒரு சேர எழுப்புவதாக இருப்பதால் இதை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்து எதையும் சொல்லி நிறுத்திவிடமுடியாது.

இது இந்தியத் திரைப்பட உலகில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் அதிசயம். பொதுவாக நிஜ வாழ்க்கையில் சாதனை செய்த இந்துக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் எடுப்பதென்றால் அந்த இந்து கதாபாத்திரத்தை இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற்றிக் காட்டுவார்கள். நிஜத்தில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் தவறு செய்திருந்தால் அவர் சாயலில் உருவாகும் கதாபாத்திரத்தை இந்துவாகக் காட்டுவார்கள். தர்பார் திரைப்படம் மும்பையில் நடக்கும் போதை மருந்து கடத்தல் பற்றிப் பேசும்போது நிஜத்தில் அதில் ஈடுபடும் தாவூத் இப்ராஹிம், கான் குடும்பங்களைவிட்டுவிட்டு மல்ஹோத்ரா, சோப்ரா என்று சித்திரித்தது. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமானது ஒரு பைசா லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன பிராமணரை ஈ.வெ.ராயிஸ்டாகக் காட்டியது. எலி வேட்டை – ஜெய் பீம் திரைப்படம் லாக்கப் படுகொலை செய்த அந்தோணிசாமியை வன்னிய குருவாகக் காட்டியது.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் அப்படியான கலைத்தீவிரவாதம் எதுவும் இல்லை. கொல்லப்பட்ட பண்டிட்கள் அதே பெயர்களுடன் அதே அடையளங்களுடன் வருகிறார்கள். கொன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் அதே அடையாளங்களுடன் அப்பட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மதம் மாறு… அல்லது…. ஓடிப் போய்விடு… அல்லது செத்துப்போ என்று காஷ்மீர இந்துக்களுக்கு விடப்பட்ட மிரட்டல் அப்படியே படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்து ஆண்கள் தப்பி ஓடுங்கள். இந்துப் பெண்களை விட்டு விட்டுச் செல்லுங்கள்… காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்குவோம்… காஷ்மீரில் இருக்கவேண்டுமென்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்லியே ஆகவேண்டும் என்று நிஜத்தில் நடந்தவை அனைத்தும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசம் முழுவதிலும் இருக்கும் இந்துக்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நேற்று பண்டிட்கள்… நாளை நாம் என்று ஓர் அதிர்ச்சி உடம்பெல்லாம் ஓடும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் இப்படியான ஒரு படுகொலை இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை உரத்த குரலில் எச்சரிக்கை செய்யும் கண்டாமணியோசையாக இருக்கிறது.

நிச்சயமாக நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களில் பலர் நாளை துப்பாக்கியை எடுத்து நம்மைச் சுட்டுவிடமாட்டார்கள் என்பது உண்மைதான். அதேநேரம் பிற இஸ்லாமியர்கள் தீவிரவாதம் பக்கம் நகர்ந்து நம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டும்போது நம் இஸ்லாமிய நண்பர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதும் அதைவிட மறுக்க முடியாத உண்மையே. ஒருவேளை நம்மை நோக்கிக் குறிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியின் முன்னால் நம் இன்றைய இஸ்லாமிய நண்பர் மிகுந்த மனிதாபிமானம் மற்றும் நட்புணர்வுடன் வந்து நின்று நம்மைக் காப்பாற்ற முயன்றால் அவரும் கொல்லப்படுவார் என்பது அதைவிடப் பெரிய வேதனையான உண்மை.

தீவிரவாதத்தை எதிர்க்கும் அனைவரும் இதைப் புரிந்துகொண்டாகவேண்டும் என்று இந்தப் படம் நம் நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியை வைத்துப் பாடம் எடுத்திருக்கிறது. திரைப்படத்தில் பாயிண்ட் பிளாங் ரேஞ்சில் கொல்லப்பட்டும் ஒவ்வொரு அப்பாவி இந்துவின் இடத்திலும் பார்வையாளராகிய நாம் நம்மை வைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டாகவேண்டிய உணர்வை, நிர்பந்தத்தைத் திரைப்படம் ஏற்படுத்துகிறது.

இடதுசாரிகள் நிரம்பிய இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவானது படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பவை எல்லாம் கற்பனையே என்ற அர்த்தம் வரும்படியான வாசகங்களுடனே இந்தப் படத்துக்கு அனுமதி தந்திருக்கிறது. எனினும் இந்தப் படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வன்முறைக் காட்சியும் அதிகார துஷ்பிரயோகமும் இன்ன பிற அராஜகங்களும் நிஜ வாழ்வில் நடந்தவையே. உண்மையில் நிஜத்தில் நடந்தவற்றில் பத்தில் ஒரு பங்குதான் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன என்றுதான் சொல்லவேண்டும்.

ஜே.என்.யு. (திரைப்படத்தில் ஏ.என்.யு) பல்கலைக்கழகத்தில் படிக்கும் கிருஷ்ண பண்டிட் எனும் இளைய போராளியின் பார்வை – வாழ்க்கை அனுபவம் என்ற கோணத்தில் படம் விரிகிறது.

உண்மையில் இடதுசாரி எக்கோ சிஸ்டம் உருவாக்கியிருக்கும் பொய்களை நம்பிப் போராளியாக இந்திய விரோதத்துடன் இயங்கும் ஒரு இளைஞன் காஷ்மீரில் ஆஅர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுகிறான். காஷ்மீருக்கு விடுதலை தரப்படவேண்டும். இந்தியா துண்டு துண்டாக உடையவேண்டும் என்று கோஷங்கள் எழுப்புகிறான். ஆனால், காஷ்மீர் அகதிகளைச் சந்தித்துப் பேசுவதன் மூலம் உண்மையைத் தெரிந்துகொண்டு போராளிகள் கும்பலை விட்டு வெளியே காஷ்மீர் மக்களின் பக்கமும் இந்திய தேசியத்தின் பக்கமும் வருகிறான் என்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் படம் கலையளவிலும் பெரு வெற்றி பெற்றிருக்கும். இந்தக் கோணத்தில்தான் திரைக்கதை இயங்குகிறது. என்றாலும் அது இலக்கை எட்டாமல் தடுமாறிவிடுகிறது.

பண்டிட்கள் மட்டுமல்ல; இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்த இஸ்லாமியர்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் என பலரும் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. இவை காட்சிகளாக இடம்பெற்றிருக்கலாம். காஷ்மீரின் மிக நீண்ட வரலாறு தொடர் வசனக் காட்சியாக எடுக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகனின் நடிப்பு அந்தக் காட்சியில் மிகவும் அருமையாகவே இருக்கிறது. அந்த பிரசங்கக் காட்சி உண்மையில் அற்புதமான வசனங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. எனினும் ஏதோ ஒரு போதாமையையும் அது கொண்டிருக்கிறது.

பிரதான கதாபாத்திரம் பிரிவினைப் போராளி நிலையில் இருந்து மனிதாபிமானமும் தேசிய நலனும் காஷ்மீர நலனும் கொண்ட மனிதனாக மாறும் மன மாற்றத்தைச் சித்திரிக்கும் அந்தக் க்ளைமாக்ஸ் காட்சி உண்மையில் ஒரு பேராசிரியரின் விரிவுரையாக ஆகிவிட்டது. உண்மையில் காஷ்மீர் பண்டிட்கள் தமது துயரங்களை உணர்ச்சிகரமாகச் சொல்லும்வகையிலான/சித்திரிக்கும்வகையிலான காட்சியாக இருந்திருக்கலாம். திரைப்படத்தில் இந்த வேதனைக் காட்சிகள் சில ஷிண்ட்லர்ஸ் லிஸ்டுக்கு இணையான கலைத்தரத்துடன் காட்சிப்படுத்தவும் பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தக் குறைகள் எவையும் இந்த இனப்படுகொலை நம் மனதில் எழுப்பவேண்டிய மனிதாபிமான நெகிழ்வை ஏற்படுத்துவதில் தவறிவிடவில்லை. வன்முறைக் கும்பல் மீதான கோபத்தை ஏற்படுத்துவதில் இருந்து பிறழ்ந்திருக்கவில்லை.

ஒரு திரைப்படமாக அது எதிர்பார்த்த இலக்கும் அதுவே.


அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
சிவராத்திரி நிகழ்ச்சிகள் முடக்கப்படவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
பள்ளிகள் காலவரையற்று மூடப்படவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
குண்டடிபட்ட தீவிரவாதியின்
அரியவகை ரத்தத்துக்காக
நம் யாருடைய மணிக்கட்டும் அறுக்கப்படவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
இந்திய உளவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு
இந்துக்கள் யாரும் சுட்டு வீழ்த்தப்படவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
மத நல்லிணக்கம் பேசிய கவிஞர்கள் யாரும்
பனி பொழியும் இரவில் நெடிதுயர்ந்த மரத்தில்
ஆணி அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கவில்லை
(அந்த மிக நீண்ட இரவில்
இளஞ்சூடான அவர்களுடைய ரத்தம்
மெள்ள மெள்ள உறைநிலைக்குச் சென்று
உறைந்து உயிர் பிரிந்திருக்கும்)

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
குடியரசு தினத்தன்று
நெற்றிப் பொட்டில்
அதாவது, குங்குமம் தரிக்கும் இடத்தில்
கைக்கு அடக்கமான துப்பாக்கி வைக்கப்பட்டு
மாணவிகள் யாரும் சுட்டு வீழ்த்தப்படவில்லை

நம் அமைதிப்பூங்காவான மாநிலத்தில்
அந்தக் கொலைகளைச் செய்தவன்
அனைவரும் பார்க்கும் ஊடகத்தில்
அதை நியாயப்படுத்திப் பேசியிருக்கவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
மரமறுக்கும் மின் ரம்பத்தால்
குழந்தையின் கண் முன்னே
உடல் பிளந்து கொல்லப்பட்டிருக்கவில்லை
எந்தவொரு அப்பாவித் தாயும்

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
கண் முன் சுட்டுக் கொல்லப்பட்ட கணவனின்
வெதுவெதுப்பான ரத்தத்தில்
’வேகவைக்கப்பட்ட’ அரிசியை
உண்ணும் நிலை எந்தப் பெண்ணுக்கும் நேர்ந்திருக்கவில்லை
(பச்சிளம் குழந்தையின் உயிரைக் காத்துகொள்ள
தீவிரவாதி பரிவுடன் கொடுத்த வாய்ப்பு அது)

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
காவல்துறையினருக்கு
தீவிரவாதிகளே உயரதிகாரிகளாக இருந்திருக்கவில்லை
அமைதிப்பூங்காவான நம் மாநிலத்தில்
பட்டியலினத்தினருக்கு
அரசியல் சாசனம் அளித்த உரிமைகள் எதுவும்
பறிக்கப்படவில்லை

அமைதிப்பூங்காவான நம் மாநிலத்தில்
இந்துக்களின் ரேஷன் பொருட்கள்
குப்பைக் கூடைகளில் கொட்டப்பட்டிருக்கவில்லை
அமைதிப் பூங்காவான நம் மாநிலத்திலிருந்து
அகதிகளாக யாரும் அடித்து விரட்டப்பட்டிருக்கவில்லை

அமைதிப்பூங்காவான நம் மாநிலத்தில்
நாம் அடைக்கலம் தேடிப் பதுங்கிய இடங்களை
எந்த அண்டைவீட்டு அமைதி மார்க்கத்தவரும்
அடையாளம் காட்டிக் கொடுத்திருக்கவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
காஃபிருக்கு அடைக்கலம் தந்ததற்காக
அமைதி மார்க்கத்தவர் யாரும்
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கவில்லை

அமைதிப் பூங்காவான நம் மாநிலத்தில்
எந்தப் புறச்சமய வழிபாட்டிடமும்
வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படவில்லை

ஆனால்
இவை அனைத்தும்
நம் காலத்தில்
நம் கண்கள் மறைக்கப்பட்டு
நம் தேசத்தின் ஓர் எல்லையில் நடந்திருக்கின்றன

நாம் இன்னோர் எல்லையில்
வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்
இந்த எல்லையில் அது நடக்காதது
நாம் செய்த நல் வினைப் பயனா
அந்த எல்லையில் நடந்தது
அவர்கள் செய்த ஊழ்வினைப் பயனா

இங்கு தோன்றிய தலைவர்கள் காரணமா
அங்கு தோன்றிய தலைவர்கள் காரணமா

இனப்படுகொலையின் இன்னல் முழுவதும் அனுபவித்து
கதி கெட்டு அலையும் கஷ்மீரத்து ஆத்மாக்கள்
நம்மிடம் மன்றாடிச் சொல்வதெல்லாம்
எந்தவொரு ரிஷியின்
எந்தவொரு புண்ணிய பூமியும்
அமைதி மார்க்கத்து அடிப்படைவாதிகள்
அளவில் குறைவாக இருக்கும்வரையே
அமைதிப் பூங்காவாகவே இருந்துவரும் என்பதையே

அந்த எளிய ஜீவன்களின் கதறலை
நாம் செவிமடுக்காமல் இருந்துவிட்டோம்
அவர்களின் வாழ்க்கை
அதாவது மரணம் உணர்த்தும்
இந்த எச்சரிக்கையையாவது
நாம் கூர்ந்து கேட்டாகவேண்டும்

நம் அமைதிப் பூங்காவிலும்
திலகம் தரிக்கும் நெற்றிகள் உண்டு
நம் அமைதிப் பூங்காவிலும்
அமைதி மார்க்கத் தீவிரவாதிகள் உண்டு.

Source link

Leave a Reply

Your email address will not be published.