பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம் – தமிழ்ஹிந்து


1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தற்போது தனது நாற்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி இரண்டு ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று பேரியக்கமாக மாறி உலகின் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியா தொன்மையும் சாதனைகளும் நிறையப் பெற்று உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது. அந்நியப் படையெடுப்புகள் மற்றும் காலனியாட்சி சிதைவுகள் நமக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக வளம் குன்றி, நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நேரு அரசின் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய அணுகுமுறை மற்றும் நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்த நடைமுறையில் பிரதமரின் போக்கு ஆகியன காங்கிரஸ் கட்சி தேசிய உணர்வோடு மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவில்லை என்பதை உணர்த்தின.

அவற்றைச் சரி செய்ய முயன்று தோற்றுப் போன மத்திய அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தனது பதவியிலிருந்து விலகினார். அதனால் தேச நலனை மையமாக வைத்துச் செயல்படக்கூடிய ஒரு கட்சி நாட்டுக்கு அவசியம் எனத் தேசியவாதிகள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பாரதிய ஜனசங்கம் 1951 ஆம் ஆண்டு திரு முகர்ஜி அவர்களைத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் முந்தைய அவதாரமான ஜன சங்கமும் அன்று முதல் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு, மண்ணின் கலாசாரத்தைப் பேணிக் காத்தல், கடைநிலை மனிதனைக் கருத்தில் வைத்து முன்னேற்றும் செயல்பாடுகள், எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம், சுதேசி அல்லது சுய சார்பு அணுகு முறைகள், உலக அளவில் தேசத்தை உயரச் செய்வது ஆகியன அதன் முக்கிய அம்சங்கள்.

1952 ஆம் வருடம் பிரதமர் நேரு ஜம்மு– காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தம் அந்த மாநிலத்துக்கென தனியான சட்டம், கொடி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றைக் கொடுத்தது. மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு நுழைய அனுமதி வாங்கும் முறை கொண்டு வரப்பட்டது.

அதை எதிர்த்து 1953 ல் முகர்ஜி அவர்கள் அங்கு நுழைந்த போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் முடியும் முன்னரே அங்கு மர்மமான முறையில் காலமானார். எனவே தேசத்தின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக தனது 52 வயதில் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், கோவா –டையூ – டாமன் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கீழ் நீடித்து வந்தன. அவற்றுக்கான விடுதலைகளுக்காக ஜன சங்கம் தீவிரமாகப் போராடி, உயிர்ப்பலி கொடுத்து, வெற்றி கண்டது.

ஆரம்ப முதலே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நேருவின் தேவையற்ற சமாதானப் போக்கை ஜனசங்கம் எச்சரித்து வந்தது. சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து 1959-60 ஆண்டுகளில் தீவிரமாக குரல் கொடுத்தது. 1965 ல் பாகிஸ்தான் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஒரு இடத்தைப் பிடித்த பின்னரும் நேரு அவர்களுடன் சமாதானமாகப் போக விரும்பினார். அதை எதிர்த்து ஜன சங்கம் நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கூட்டங்கள் நடத்தியது.

அதே சமயம் பாகிஸ்தானுடன் போர் வரும் சமயங்களில் மத்திய அரசுக்கு முழு ஆதரவைக் கட்சி அளித்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு திரு வாஜ்பாய் அவர்கள் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தினார்.

திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 முதல் தேசத்தின் பாதுகாப்புக்கு அதிகபட்சமான கவனம் கொடுத்து வருகிறது. பாதுகாப்புக் கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன. எல்லைகளில் அத்து மீறுவோருக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது. பாகிஸ்தான் கோட்டைத் தாண்டி 2016 ல் நடத்தப்பட்ட ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ மற்றும் 2019- ல் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் நடத்தப்பட்ட’ ஏர் ஸ்ட்ரைக்’ ஆகியன அண்டை நாட்டை அச்சத்தில் வைத்துள்ளன. அதே போல சீனாவும் அடங்கிக் கிடக்கிறது.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நேருவால் திணிக்கப்பட்டது. அதனால் அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். பெண்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

2019 ஆம் வருடம் மோடி அரசு சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ இரண்டையும் நீக்கி தேச ஒருங்கிணைப்பை உறுதிப் படுத்தியது. அதனால் அங்கு தீவிரவாதம் குறைந்து வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. மேலும் இடது சாரி தீவிரவாதம் வேகமாக குறைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பிரிவினைவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அவை தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

இந்தியா பாரம்பரியமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்ட தேசம். ஆனால் சுதந்திரம் பெற்றதும் நேருவின் அரசு நாட்டுக்குப் பொருத்தமில்லாத அந்நிய சித்தாந்தை அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தியது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் 1954 ஆம் வருடமே ஜன சங்கம் சுதேசிக் கொள்கை அவசியமென அறைகூவல் விடுத்தது. 1965 ஆம் வருடம் ஒருங்கிணைந்த மனித நேய தத்துவம் கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது நமது தேசத்தின் பாரம்பரிய சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒட்டிய கலாசாரத்துடன் இணைந்த சமூக –பொருளாதார கோட்பாடாகும். அதை ஜன சங்கத்தை உருவாக்கிய முக்கிய தலைவரும் சிந்தனையாளருமான திரு தீனதயாள் உபாத்யாய அவர்கள் முன் வைத்தார். அதன் அடிப்படை கடைசி மனிதனும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும் என்பதாகும்.

பாரதிய ஜனதா தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் தொடர்ந்து ஏழை மக்கள், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினர் என நலிவடைந்த பிரிவினருக்குச் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் அவர்கள் பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர்.

உதாரணமாக மோடி அரசு ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஜன தன திட்டம் என்னும் ஒன்றை 2014ல் ஆரம்பித்தது. இதுவரை அந்த திட்டத்தின் கீழ் 45 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தமாக 1,64,000 கோடி ரூபாய் வைப்புகளாக உள்ளது. மொத்த கணக்குகளில் 56 விழுக்காடு பெண்கள் பராமரிப்பவை.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்பது கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மக்கள் மற்றும் பெண்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ” எழுந்து நில் இந்தியா” திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒவ்வொரு கிளையும் குறைந்தது ஒரு பட்டியலினத்தவர் அல்லது மலை வாழ் மக்கள் மற்றும் ஒரு பெண்மணிக்கு புதிதாக தொழில் துவங்க கடன் கொடுக்க வேண்டும்.

இலக்குகளை வைத்து திட்டங்கள் தீட்டி அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முடியுமாறு செயல்படுவது மோடி அரசின் தனித்தன்மை. அதனால் இப்போது நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை. கடந்த இரு வருடங்களில் மட்டும் ஐந்து கோடியே ஐம்பது லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் எண்பது லட்சம் புதிய வீடுகள் கட்டவும், மேலும் மூன்று கோடியே எண்பது லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், வேகமாக மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு துறைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் சென்ற நிதியாண்டில் 9.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.

ஒரு நாடு நீடித்த தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் சுயசார்பு என்பது அவசியம். அந்த வகையில் ‘ இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் தொடங்கி, அண்மைக் காலமாக சுய சார்பு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகமாகி, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதிகள் குறைந்து வருகின்றன.

கொரோனா காலத்தில் குறுகிய காலத்திலேயே உள் நாட்டில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகமாக 183 கோடி பேருக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மறைமுக வரிகளைச் சீரமைக்க மோடி அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மார்ச் 2022 மாதம் 1,42,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியும், வெளிநாட்டு முதலீடுகளும் அதிக அளவில் உள்ளன.

இந்திய தேசத்தின் அடிநாதமாக விளங்குவது தனித்துவம் வாய்ந்த நமது பண்பாடு. அதனடிப்படையில் நமது மண்ணுக்கே உரித்தான கலாசார முறைகளைப் பேணிக் காப்பதற்குப் பாரதிய ஜனதா அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்லாண்டு காலமாக நாட்டு மக்கள் காண விரும்பிய இராமபிரான் ஆலயம் அவருடைய பிறப்பிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

சுதந்திரம் பெற்றது முதல் காலமாகவே காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சியில் வாக்கு வங்கி அரசியல் பிரதானமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவருக்குமான வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா ஆட்சியின் அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது. அண்மைக் காலமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடமும் நட்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் நமது நாட்டு நலன்களை மட்டுமே வைத்து நமது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன. அதனால் தான் தற்போது நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போர் விசயத்தில் மேற்கு நாடுகளின் அழுத்தங்களையெல்லாம் மீறி நமது செயல்பாடு அமைந்துள்ளது.

2014 முதல் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் கால கட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தேச பக்தி மிக்க அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், கடுமையான உழைப்பு ஆகியன நாட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதனால் நாட்டில் மொத்தம் பதினெட்டு மாநிலங்கள் – யூனியன் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போது மாநிலங்களவையில் நூறு இடங்களைப் பெற்று, முப்பது வருடங்களுக்கு அப்புறம் அந்த இலக்கினை அடைந்த பெருமையைப் பெற்றுள்ளது.

நிறைய வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நமது தேசம் இன்று உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, புதிய இந்தியாவை வடிவமைத்துக் கொண்டிருப்பதில் ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதாவின் பங்கு மிக முக்கியமானது. அதனால் பல தரப்பட்ட மக்களின் ஆதரவையும் அதிகம் பெற்று எழுபது வருட காலத்தில் உலகின் மிகப் பெரும் ஜனநாயக கட்சியாக உருவெடுத்துள்ளது. .

( ஏப்ரல் 6 பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள்)

Source link

Leave a Reply

Your email address will not be published.