இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை


இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனிதவாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவருகிறது. உணவுப் பொருள், எரிபொருள், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்து நுகர்பொருள்களுக்கும் தட்டுப்பாடு, பயங்கரமான உணவுப்பொருள் விலையேற்றம், மருத்துவமனைகள் இயக்கம் நிறுத்தம், முதலீடுகள் முடக்கம், அமைதியிழந்து வீதிக்கு வந்து போராடும் மக்கள்..

இலங்கை அரசிடம் இப்போது கையிருப்பில் உள்ள பணம் மொத்தமே 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் என்கிறார்கள் (ஒரு ஒப்பீட்டுக்காக, ஹாலிவுட் நடிகர்கள், சில அமெரிக்க மாடல் அழகிகளின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இதைவிட அதிகம்). நாடு திவாலாகி விட்டது. உலக வங்கியின் கடைக்கண் பார்வையை நோக்கிக் காத்திருக்கிறது.

இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதுகுறித்த எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் அன்று இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் நிகத்திய பெரும் குண்டுவெடிப்புத் தாக்குதல் இந்த சீரழிவுத் தொடரின் முதல்கண்ணி. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் இயங்கும் சுற்றுலாத் துறை (இலங்கையின் பொருளாதாரத்திற்கு 15%க்கும் மேலாக பங்களிக்கும் துறை இது) இதனால் முற்றிலும் முடங்கிப்போய், அடுத்தடுத்து வந்த கோவிட் தொற்று அலைகளால் மரண அடி வாங்கியது. அதே ஆண்டில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது – வரி விகிதங்களை அபாயகரமான அளவுக்குக் குறைத்தல், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்கள் சலுகைகள், அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம் என்ற குறுகிய நோக்கில் உரங்களின் இறக்குமதிக்குத் தடை, அதனால் ஏற்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தி வீழ்ச்சி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து அதீதமான சலுகைப் பொருளாதாரம் (extreme welfare economics) என்பதை நோக்கிச் சென்ற ராஜபக்சேக்களின் கேனத்தனத்திற்கு இலங்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய விலை இது.

இலங்கையின் இந்த நெருக்கடியை எதிர்பார்த்த சீனா, திவாலாகும் கடன்காரனைப் பார்த்து கிளுகிளுக்கும் ஈட்டிக்காரனைப் போல இப்போது குரூர புன்னகையை வீசிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய தங்களது ஏவலாள் போல ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ராஜபக்சேக்கள் பதவியிழக்கும் சாத்தியம் உள்ளதால், இலங்கைக்கு எந்தவிதமான “கருணை”யையும், சலுகைகையும் அளிக்க சீனா தயாராக இல்லை. ஆனால் ராஜபக்சேக்களால் திமிராக உதாசீனம் செய்யப்பட்ட இந்தியா, நீண்டகால நட்புறவையும், மனிதாபிமானத்தையும் கருதி இந்த துயர சூழலில் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. இனி இலங்கையின் பொருளாதாரம் உலக வங்கியின் தயவினால் மட்டுமே மீண்டெழ முடியும் என்ற நிலையில், உலக வங்கியின் எந்தவிதமான கிடுக்கிப்பிடி நிபந்தனைகளையும் சிறிதுகூட மறுக்க இயலாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது. சீனாவின் எரிகொள்ளியிலிருந்து உலகவங்கியின் எஜமானர்களான மேற்கத்திய நாடுகளின் அக்னி குண்டத்தை நோக்கிச் செல்வதைத் தவிர இப்போது இலங்கைக்கு வேறு வழியில்லை 🙁

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை. மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சி புரியும் திருணமூல், மார்க்சிஸ்டு, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளின் அபத்தமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் பல ராஜபக்சேக்களின் கொள்கைகளை ஒத்துள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால், இந்த மாநிலங்களுக்கு இலங்கை போன்ற ஒரு நிலைமை எந்தக் காலத்திலும் ஏற்படப் போவதில்லை, ஏனென்றால் உலக அளவில் ஆறாவதாக உள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரம் இத்தகைய சில மாநிலங்களின் சில்லறைத் தனங்களைத் தாண்டி மிக வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவின் தலைமை நரேந்திர மோதி என்ற மகத்தான தலைவரின் கையில் உள்ளது. அதன் கீழ் இயங்கும் மத்திய அரசும் அதன் அனைத்துத் துறைகளும் மிகுந்த தீர்க்கதரிசனத்துடனும், நிர்வாகத் திறமையுடனும் இந்த தேசத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை மக்களுக்காக நமது பிரார்த்தனைகள். அன்னை பராசக்தி அந்த நாட்டைக் காத்திடுக.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

Source link

Leave a Reply

Your email address will not be published.