கம்பன் காட்டும் இலக்கியச்சுவை – தமிழ்ஹிந்து


உலகக் காப்பிய வரிசையில் முன்நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமகாதையில் இலக்கியச்சுவையை அரியதொரு சுரங்கமாக்கிக் கொடுத்துள்ளான். ஒவ்வொரு வரியுமே கூட மிகுதியான இலக்கியச்சுவையுடன் அமையும். எடுத்துக்காட்டாக, அகத்தியரைக் கூறும் இடத்தில்,

நாகமது நாகமுற நாகமென நின்றான்,‘ என்பான். நாகம் என்பது இங்கு முறையே விந்தியமலை, பாதாளம், யானை எனப் பல பொருள்களில் அமையும். எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்,’ ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ,’ என்பவை இன்னும் சில சான்றுகளாகும். மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.

இராமனின் திருமணத்துக்காக மிதிலை நோக்கிச் செல்லும் அயோத்தி மக்களின் பயணத்து நிகழ்வில் பூக்கொய் படலத்தில் ஒரு பெண்ணின் முகத்தை ஒரு வண்டு கண்டுவிட்டது. பிறைபோன்ற நெற்றிகொண்ட பெண்களாகிய கொடிகள் ஒவ்வொன்றிலும் ஆறுகளிலும் குளங்களிலும் மட்டுமே பூக்கும் தாமரை மலர்கள் தம்மில் இரண்டு குவளைமலர்களோடு பூத்திருப்பதனைக்கண்டு அதற்கு ஒரே அதிசயம்: என்ன, இது ஆற்றிலும் குளத்திலும் பூக்கும் கமலமும் குவளையும் இந்தச் சந்திரனிலும் மலர்ந்துள்ளதே என்று சுற்றச்சுற்றி வந்து அந்த அதிசய அழகைக் காணுகிறதாம். வீழ்ந்து மொய்க்கின்றதாம்; விரட்டியும் போகவில்லையாம்.

நதியினும் குளத்தும் பூவா 
		நளினங்கள் குவளையோடு
	மதிநுதல் வல்லி பூப்ப 
		நோக்கிய மழலைத் தும்பி
	அதிசயம் எய்திப் புக்கு 
		வீழ்ந்தன, அலைக்கப் போகா;
	புதியன கண்ட போழ்து 
		விடுவரோ புதுமை பார்ப்பார்?
							(கம்பன் 983)

ஆம்! வண்டுகள் கூடப் புதுமையை விரும்பும் குணம் உடையன. எனவேதான் புதுமை கண்டதும் எளிதில் விடாதவர்களைப்போல் தாமும் அம்மலர்களாகிய முகங்களை விடாது சுற்றுகின்றன.

மேலும் இப்பகுதியில் ஒரு காட்சி: கார்மேகம் போன்ற கூந்தலையுடையவளும் குயில்போலும் குரலையும் கொண்ட தலைவி தலைவனிடம் வருகிறாள். போர் என்று சொன்னவுடனேயே பூரித்துப் பருக்கும் திண்மையான தோள்களையுடைய மன்மதனையொத்தவனும் பூக்களைக் கொய்து கொண்டிருந்தவனுமான தனது தலைவனின் கண்களைப் பொத்தினாள்; தலைவன் ‘ஆர் அது?’ என்று கேட்டான். கேட்டவுடனேயே தலைவி தீ போல வெதும்பி அயிர்த்தாள்; பெருமூச்சு விட்டு உயிர்த்தாள்.

தான் அவன் கண்ணைப் பொத்தியவுடன் தன் பெயரைச் சொல்லிக் கையை எடு என்று கூற வேண்டியவன், ‘ஆர் அது?’ எனக் கேட்டதனால், அவன் கண்ணைப்பொத்தி விளையாடும் பெண்கள் இன்னும் சிலர் உண்டுபோலும் என எண்ணிச் சினம் கொண்டவளாகிறாள் அப்பெண்.

போர் என்ன வீங்கும் பொருப்பன்ன 
		பொலங்கொள் திண்தோள்
	மாரன் அனையான் மலர்கொய்து 
		இருந்தானை வந்து ஓர்
	கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் 
		கண்புதைப்ப
	ஆர்? என்னலோடும் அனல் என்ன 
		அயிர்த்து உயிர்த்தாள்.
							(கம்பன் 992)
ஆம்; ஆர் என்று கேட்டதும் சந்தேகப்பட்டுச் சினந்தாள். இது திருக்குறளில் தும்மியவனை வழுத்திப் பின் அழித்தழுத தலைவியின் செயலை நினைவூட்டும். 
	வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
	யாருள்ளித் தும்மினீர் என்று.		(திருக்குறள்- காமத்துப்பால்)


மிதிலையில் இராமன் உலாவியற் காட்சி; இங்கு பல பாடல்களில் அருமையான காட்சிகளை அமைத்துள்ளான் கம்பன். உலாவரும் இராமனைக்கண்டு மகளிர் மையல்கொண்டு கூறுவன மிக்க சுவையுடையனவாம். ஒருத்தி தன் தோழியிடம் கூறுவாள்: “என் நெஞ்சில் வஞ்சனாகிய இராமன் வந்து புகுந்துள்ளான். அவன் என் கண் வழியாக வெளியே போய்விடுவான்; எனவே அவன் வெளியேற இயலாதபடி என் கண்ணைச் சிக்கென மூடிக்கொள்வேன், இனி அவனுடன் படுக்கைக்குப் போய்ச் சேர்வோம்,” என்பாள்.

மைக்கருங்கூந்தல் செவ்வாய் வாள்நுதல் ஒருத்தி உள்ளம்
	நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
	புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள் வாயில்
	சிக்கென அடைத்தேன் தோழி! சேருதும் அமளி என்றாள்.
என்பது அப்பாடல்.					(கம்பன் 1023)

அடுத்து தும்பியின் இன்னிசைக்குப் பரிசாகப் பொன்னும் காசும் நிலமகள் கொடுக்கிறாளாம். இதனைக் கார்காலப்படலத்தில்,

நன்னெடுங் காந்தள் போதில் நறைவிரி கடுக்கை மென்பூ
	துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி
	இன்னிசை முரல்வ நோக்கி இருநில மகள் கையேந்தி
	பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்ற தன்றே.
							(கம்பன் 4173)
என்பான்

அதாவது, காந்தள் மலரின் மேல் பக்கத்திலிருந்த கொன்றை மரத்தின் பூக்கள் உதிர்ந்து உள்ளன. அதனை இந்திரகோபப் பூச்சிகள் (தம்பலப்பூச்சிகள்) சூழ்ந்து இருக்கின்றன. இது இசைபாடிய தும்பிக்கு கொன்றைமரம் பூவாகிய பொன்னையும், இந்திரகோபமாகிய காசையும் காந்தளாகிய கைவிரல்களில் ஏந்தி நிலமகள் கொடுக்கிறதுபோல உள்ளதாம்.


மேலும் சுந்தர காண்டத்தில் சூளாமணி படலத்தில் அனுமன் சீதையைத் தேற்றும் இடத்தில்,

வினையுடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக
	சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்
	அனகன் கை அம்பு எனும் அளவுலகில் ஊதையால்
	கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால்.
						(கம்பன் 5403)

‘தீவினை உடைய அரக்கர்களாகிய கரி வெந்து அழிய, சானகி எனும் நெருப்பு அவர் நடுவில் தங்கி இருப்பதால் இராமன் செலுத்திய அம்பு எனும் பெருங்காற்றால் அந்த நெருப்பு கனன்று, பொன்போலும் இலங்கை நகர் உருகிடும், இதனை நீ காண்பாய்,’ என அனுமன் கூறுவான். மிக அருமையான உருவகங்கள்.


போர்க்களத்தில் நிகழும் காட்சிகளைப் பல இடங்களில் கம்பன் விவரித்துக் கூறுவான். அதில் படைத்தலைவர் வதைப்படலத்தில், அரக்கர் பலரும் போர்த்தொழிலிலே உண்டான கோபத்தால் சினந்து வாய் மடித்தனர். அப்படியே உயிரையும் விட்டனர். அரக்கியர் தம் கணவன்மார் வாய்மடித்து உயிர் துறந்தமை கண்டு சினக்கிறாராம்; ஏன்?

சிலவர் தம் பெருங்கணவர் தம் செருத்தொழில் சினத்தால்
	பலரும் வாய்மடித்து உயிர் துறந்தார் களைப் பார்த்தார்
	அலைவு இல்வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது அயலாள்
	கலவியின் குறி காண்டும் என்று ஆம்எனக் கனன்றார்.
							(கம்பன் 8366)

இவர்கள் வெண்ணிறப் பற்களினால் உதடுகளை மறைத்து நின்றது, அயலாள் கலவியின் குறி வாயில் இருப்பதை நாம் பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் போலும் என்று எண்ணிச் சினந்தார்களாம் அந்த அரக்கியர்.

இதனை,

வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
		மணியதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ
	நீமடித்துக் கிடந்ததுஎனப் புலவிகூர்ந்து
		நின்று ஆவி சோர்வாளைக் காண்மின் காண்மின்.
							(கலிங்கத்துப்பரணி-482)

எனும் கலிங்கத்துப்பரணிப்பாட்டிலும் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம். வாயினை மடித்துப் பற்களால் கடித்தவாறு இறந்துகிடந்த தனது தலைவனைப் பார்த்து, 'உன் அதரங்களில் ஏதேனும் வடுவுண்டோ? அதனை நான் காணலாகாது என மடித்துக் கொண்டாயோ என்று கேட்டு இருவிதங்களிலும் - அவன் இறந்ததாலும் அவன் வேறு மகளிருடன் தொடர்பு கொண்டிருந்தானோ என்பதாலும் - ஆவி சோரும் பெண்ணைக் காண்பீர்கள்!" என்பது பொருள்.

மூலபல வதைப்படலத்தில் கம்பன் வையமகளைப்பற்றிக் கூறும் இடத்து அவளின் கோலத்தையும், போர்க்களத்தில் செருமங்கை அம்மானை ஆடுவதையும் பற்றிக் கூறுவான்.

நிணத்துடன் கூடிய குருதியால் நிறைந்த பெருங்கடலாடை நிலமங்கையின் செவ்வாடை; அதே நிறத்தில் சிவந்த சாந்தும் அணிந்து சினந்த கோலம் கொண்டாளாம் அவள். அது மங்கல நாளினில் பெண்டிர் மேற்கொள்ளும் செந்நிறக்கோலம் போல இருந்ததாம்!

நெய்கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
	செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்
	வைய மங்கை பொலிந்தனள் மங்கலச்
	செய்ய கோலம் புனைந்தன செய்கையாள்
								(கம்பன் 9432)

உள்ளத்தில் வஞ்சக எண்ணம் கொண்ட அரக்கர்களின் தலைகள் இராமனின் அம்புகளால் துண்டிக்கப்பெற்று, வெம்மையடைந்து எழுந்து உயரே எழுந்து செருக்களத்தே அந்த அறுந்ததலைகள் துடித்துக் கொண்டிருப்பது போர்க்களத்தில் செருமங்கை எனப்படும் போர்மகள் அம்மானை ஆடுவது போன்று உளது என்பான் கம்பன்.

தம்மனத்தில் சலத்தர் மலைத்தலை
	வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ
	தெம்முனைச் செருமங்கை தன் செங்கையால்
	அம்மனைக் குலம் ஆடுவ போன்றவே
								(கம்பன் 9420)

ஆம்: நிலமகளின் செய்யகோலத்தையும் செருமகளின் அம்மானை ஆடலையும் சிறப்பாகப் படைத்துள்ளான் கம்பன்.

Series Navigation

<< கம்பராமாயணத்தில்  சிவபெருமான் 

Source link

Leave a Reply

Your email address will not be published.