Comment on ம(மா)ரியம்மா – 8 by Saravanan 620012


நாங்குநேரி – அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்து!
நான்கு பேர் மரணம்!
ஒரு வாரமாக ஆகியும் தீர்வுகாண மறுப்பது ஏன்?

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை – நாங்குநேரி அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இளையார்குளம் செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), காக்கைக்குளம் செல்வகுமார் (30) மூன்று பேர் இறந்தும், நாட்டார்குளம் விஜய் (25), விட்டிலாபுரம் முருகன் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டும்; ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் (42) மீட்கப் படாமலும் இருக்கின்றனர். ஒரு வார கால ஆகியும் அந்தக் கோர விபத்தில் இறந்தவர்கள், காயம்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நியாயம் வழங்காமல் அரசியல் தலையீட்டால் மாநில அரசு கால விரயம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் காயத்துடன் மீட்கப்பட்ட ஒருவரைத்தவிர மற்ற 5 பேரும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதில் ’செல்வம்’ என்ற இளைஞர் அண்மையில்தான் தலையாரி பணிக்குத் தேர்வு பெற்று இருக்கிறார். இந்த கல்குவாரி 2018 முதல் 2023 வரை 5 ஆண்டுகளுக்கு அனுமதி பெற்று, ஐந்து ஆண்டுகளில் எடுக்கவேண்டிய அளவை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே எட்டி விட்டதால் காரணத்தினால் 2021-லேயே குவாரியை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அனுமதி ரத்து செய்யப்பட்ட பின்பு, அரசியல் அதிகாரம் மற்றும் அதிகாரிகளின் துணையோடு ’தினச்சீட்டு’ என்ற விசித்திரமான அனுமதியின் பெயரில் குவாரி இயங்கிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 200 அடிக்குக் கீழே உள்ள கல்குவாரி குழியிலிருந்து கற்களை ஏற்றி வருவதற்கான உள் சுற்றுப்பாதை குறைந்தபட்சம் ஏழரை மீட்டர் இருக்க வேண்டும் என்ற விதி, சுற்றுப்புறச்சூழல் – தொழிலாளர் துறை பதிவு, வெடிமருந்து பாதுகாப்புத் துறை சான்றிதழ், தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளின் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறி அந்த குவாரி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.

நாங்குநேரி பகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, வணிக நிறுவனங்களோ, வேளாண்மை சார்ந்த நிரந்தரமான வேலை வாய்ப்புகளோ எதுவும் இல்லாததால் இது போன்ற மிகக் கடினமான வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற சட்டவிரோத கல்குவாரி நடத்துபவர்கள். அப்பகுதி மக்களை இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிகின்றனர். சட்ட விரோத குவாரியால் நான்கு பேர் உயிரிழந்தது மட்டுமல்ல, அவர்களை நம்பியிருந்த குடும்பங்களின் வாழ்நிலையும் நிலைகுலைந்து போயிருக்கிறது. பெரிய அளவிற்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாத அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கல்குவாரிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வாரத்திற்கு மேலாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இம்மக்களுடைய உழைப்பால் கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொழுத்தவர்கள் இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்ற பிறகும் கூட அவர்கள் கொள்ளை அடித்த பணத்திலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தார் நிவாரணமாகக் கேட்ட நிதியை ஒதுக்குவதற்கு கூடக் கிஞ்சித்தும் மனம் இல்லாமல் அரசியல் அதிகார போர்வைக்குள் ஒளிந்துகொள்ள நினைக்கிறார்கள். இன்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக ஒப்புக்கு அதனுடைய உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு அடுத்த இரண்டொரு தினங்களில் கூட அவர்கள் வெளியே வந்து விடுவார்கள். அந்த குடும்பங்கள் கேட்பது முழுக்க முழுக்க நியாயமான கோரிக்கை. குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும் நட்ட ஈடாகக் கேட்கிறார்கள். இந்த அரசு மற்றும் குவாரி உரிமையாளர்களால் இதை வழங்க முடியாதா? இதுவரை யாருக்கும் இது போன்ற நஷ்டஈடு வழங்கவில்லையா? இறந்த நான்கு பேருடைய குடும்பத்தாருக்கு அரசு வேலை கொடுப்பதற்கு இந்த அரசுக்கு என்ன கஷ்டம்? ஆனால் எதையுமே செய்யாமல் இந்த அரசும் குவாரி உரிமையாளர்களும் ’இரண்டொரு நாள் நீடித்தால் இப்பிரச்சனை நீர்த்துப் போய்விடும்’ என்ற எண்ணத்தோடே இப்பிரச்சனையை அணுகுவதாகத் தெரிகிறது. இந்தப் போக்கில் இப்பிரச்சனையை அரசு அணுகுமேயானால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.

மாநில அரசு இறந்தவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும், அவர்கள் வலியுறுத்திய 1 கோடி ரூபாயையும் உடனடியாக வழங்கிட வேண்டும். சட்டவிரோதமாக இந்தக் குவாரி இயங்குவதற்குக் காரணமாக இருந்த ஒரு ஒரு அதிகாரியை மட்டும் கண்துடைப்பாக இடைநீக்கம் செய்து ஏமாற்றாமல், கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட, மாநில அளவில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து அரசு செவி சாய்க்கவில்லை எனில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் 23.05.2022 திங்கட்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.

– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
20.05.2022Source link

Leave a Reply

Your email address will not be published.