தியாகச்சுடர் வீர சாவர்க்கரின் தீர்க்கதரிசனம் – தமிழ்ஹிந்து


(மே-28 வீர சாவர்க்கர் பிறந்த தினம்)

இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த வீரர்களுள் மிக அதிகமாக தியாகங்களை செய்தவர், வலிகளையும், இழப்புகளையும் அனுபவித்தவர் வீர சாவர்க்கர். இத்தனையும் அனுபவித்து விட்டு பின் அதற்கேற்ற அளவு அங்கீகாரம் பெறாமல் வாழ்ந்தவர்.

சாபேக்கர் சகோதரர்களும்,மகாதேவ் ரானடேவும் ஆங்கில அதிகாரியை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட காலம். அவர்கள் விட்டுசென்ற பணியை தொடர மித்ர மேளா என்ற அமைப்பை தன் நண்பர்களை கொண்டு துவக்கினார் சாவர்க்கர். இதுவே பின்னாளில் அபினவ் பாரத் என்றாகியது. ஆயுத புரட்சி மூலமே அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி சுதந்திரத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பிய அவர் இதனை துவங்கும் போது வயது 15.

ஆயுத புரட்சி என்றால் போராளி வேடம் பூண்டு நம் மக்களையே கொல்வதல்ல. மாறாக, காவல் துறை மற்றும் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்களை போராட வைப்பது. ஆயுத புரட்சி,கொரில்லா போர்முறை போன்றவற்றை கற்றுக்கொடுத்து இளைஞர்களை காவல் துறைக்கும் ராணுவத்திற்கும் சேர வைப்பது. மற்றநாடுகளுடன் நட்புறவு பூண்டு அவர்களின் உதவியோடு ஆயுதம் பெற்று இங்கே புரட்சியை செய்வது. இதில் இறுதி வெற்றி கிட்டும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடருவது என்பதே அவருடைய எண்ணம்.

ஆனால், இங்கே அரசியலில் 1800களின் இறுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்கு யாருக்காக நாம போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. காங்கிரசின் (அக்கால) தேசியவாதம் ஹிந்தி, ஹிந்து ஆகிய அடையாளங்களை பின்னியே இருந்தது. அப்போது அதில் வெறுப்படைந்த அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை தோற்றுவித்த சர் சையத் அஹமத் காங்கிரசின் தேசியவாதத்தை மறுத்து இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு நாடுகள் தேவை,இவர்கள் இணைந்து வாழ்வது என்பது இயலாது என்ற கோஷத்துடன் முஸ்லீம் லீக் அமைப்பை துவக்கினார். அது துவக்கப்பட்ட போது சாவர்க்கருக்கு வயது 5. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நிலைப்பாடு மத அடிப்படைவாதத்தை மட்டுமே முன்வைத்து இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழவே முடியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் செய்து கொண்டு இருந்தது. காங்கிரசிலும் இதனால் பெரிய பிளவு செயல்பாட்டு அளவில் வந்தது.

அப்பொழுது தான் சாவர்க்கருக்கு ஹிந்து என்பவன் யார் என்ற சிந்தனை எழுந்தது. அந்தமானில் சிறைதண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது அவர் சிந்து நதியின் மறுபுறம் இருக்கும் நிலப்பரப்பை தன்னுடைய புண்ணிய பூமியாக தாய் நாடாக யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்ற கோட்பாட்டை எழுதினார். இதன் விரிவாக்கம் பின்னாளில் மிகப் பிரபலமாக இந்துத்துவம் என வளர்ச்சி அடைந்தது.

இது அந்நாளைய காங்கிரசின் தேசியவாதத்திற்கு எதிரானது. மத அடிப்படைவாதிகளின் பிடியில் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருந்த இஸ்லாமியர்களை தேசியத்தின் பக்கம் இது இழுக்க உதவவில்லை. காரணம், நம்முடைய சமுதாயத்தில் இருந்த சில இறுகிப்போன நடைமுறைகள்.

ஒரு பக்கம் கலாச்சார தேசியம் என்ற கருத்தாக்கத்தை பரப்பிக்கொண்டிருந்த சாவர்க்கர் அதற்கு இருந்த முட்டுகட்டைகளான சாதீயம், தீண்டாமை ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். மதம் மாறி போனவர்களை திரும்ப இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கு இது மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

சாவர்க்கரின் இந்த முயற்சிக்கு அன்று பெருமளவில் ஆதரவு இருந்திருந்தால் பின்னாளில் பல மீனாட்சிபுரங்ககள் தவிர்க்க பட்டிருக்கும். அவருக்கு ரத்தினகிரியை தாண்டி வெளியே செல்ல கூடாது என்ற தடை இல்லாதிருந்தால் அவர் தாய் மதம் திரும்ப விரும்புவோர் திரும்புவதையும் ஹிந்து மதத்தின் சமூக பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய அளவில் இயங்கி இருப்பார்.

(வி.வி.பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Source link

Leave a Reply

Your email address will not be published.