விக்ரம் 2022 – திரைப்பார்வை  – தமிழ்ஹிந்து


நடிகர் குழு: கமல்ஹாசன், பாஹத் ஃபாஸில், விஜய் சேதுபதி, சூர்யா

இசை: அனிருத்

போதை மருந்துப் பைத்தியங்களின் தொழிற்சாலை

கதை: போலீஸ் உயர் அதிகாரிகள் போதை மருந்து விற்கும் கும்பல்களுடன் கைகோர்த்து வியாபாரம் செய்கிறார்கள். பொதுவில் சர்வசாதாரணமாக பீச்சில் யூனிஃபார்ம் உடன் உட்கார்ந்து போதை மருந்து கும்பலுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் (அந்த அளவுக்கு ‘சிஸ்டம்’ சரியில்லையாம்). போதை மருந்துக் கடத்தலைப் பிடிக்கும் இளம் போலீஸ் அதிகாரிகள் லஞ்சத்துக்குப் படியாத பட்சத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளாலேயே கொல்லப்படுகிறார்கள். போதைப் பொருள்களைக் கப்பலில் (நாயகன் படத்தில் பெரிய படகில் கடத்திய கமல் 3ம் தலைமுறைக்கு ஏற்றார்போல முன்னேற வேண்டாமா? ஆகவே இம்முறை மிகப்பெரிய சரக்கு கப்பலில்) கடத்திவரும் இந்த கும்பலிடம் இருந்து ஒரு கண்டெயினர் கோக்கைன் ஐ போலீஸ் அதிகாரி கடத்தி ஒளித்து வைக்கிறார். அதாவது ஒத்தைப் போலீஸ் அதிகாரி ஆயிரக்கணக்கான கிலோ cocaine உள்ள 30′ x 10′ x 8′ அடி சைஸில் ஒரு லாரியை விடப் பெரிய மிகப்பெரிய ஒரு கன்டெயினரையே எப்படியோ போதை மருந்து மாஃபியாவிடம் இருந்து பிடுங்கி ஒளித்து!! வைக்கிறாராம். அந்த அதிகாரி விக்ரமின் (கமல்ஹாசன்) மகனாம்.

அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியை சரக்கைத் திரும்ப கடத்தல் கும்பலிடமே ஒப்படைக்கச் சொல்லி போலீஸ் சூப்பரின்டென்டென்ட் கொடுமைப்படுத்திக் கொலை செய்கிறார். அதை தீவிரவாதிகள் செய்வதாக ஜோடிக்கிறார். இதைப் புரிந்து கொள்ளும் கமலஹாசன், பழிவாங்க வாரத்திற்கு ஒன்று என கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை ஒவ்வொருவராகக் கொன்று, அதே கற்பனைத் தீவிரவாதிகளே இந்தக் கொலைகளையும் செய்வதாக தொடர்ச்சி ஏற்படுத்துகிறார். தான் பிடிபடாமல் இருக்க கமல்ஹாசன் ஏற்கனவே கொல்லப்பட்டதாய்க் கதை சொல்லப்படுவதாலும், கொலை செய்வது யார் என்று அடையாளம் எதுவுமே காட்டாமல் இருப்பதனாலும், கமலஹாசனின் முகம் இண்டெர்வெலுக்குப் பின்புதான் தெரிவதனாலும் நமக்கும் யார் யாரைக் கொல்கிறார்கள் என்பதும் குழப்பமாக இருப்பதால் இது கமல்ஹாசன் படம் என்று நிரூபணமாகிறது.

குழம்பும் போலீஸ்காரர்கள் “ஒரு ஏஜென்ஸி”யைத் ??? தொடர்பு கொண்டு தொடர் போலீஸ் கொலைகளுக்குத் துப்பு துலக்கச் சொல்ல, அதில் உள்ளவர்கள் போலீசிடம் துப்பாக்கி, வெடிகுண்டு ( 30 கிலோ RDXஆம்) எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.. அந்த ஏஜென்ஸியின் துடிப்பு மிக்க தலைவனாக வருவது மலையாள நடிகர் பஹத் ஃபாஸில் – அவர் மட்டும் நன்றாக நடித்துள்ளார். . ஏஜென்ஸி துப்புத் துலக்கி கமல்ஹாசனின் செய்கைகளைப் புரிந்துகொண்டு பின்பு துப்பாக்கிகளை போலீஸில் ஒப்படைத்து வெடிகுண்டுகளை ஒப்படைக்காமல் செல்கிறார்கள். அந்த குண்டுகளை வைத்து போதைமருந்து விற்கும் கும்பலின் கோட்டையை தரைமட்டமாக்குகிறார்கள். ( 40 பேர் உள்ள பயங்கர ரவுடிக் குடும்பத்தின் மிகப்பெரிய வீட்டின் அடித்தளத்தில் ஆயுதங்களுடன் 100 பேர் வேலை பார்க்கும் போதை மருந்து தயாரிக்கும் லேப் உள்ளது என அனுமானித்து, ஒத்தை ஆளாய் பூச்சி மருந்து தெளிப்பதாக அந்த குடும்பத்தினரிடம் சொல்லி, உள்ளே சென்று 50 இடங்களில் வெடிகுண்டுகளை பொருத்தி, எலெக்ட்ரிக் கனெக்ஷன் கொடுத்து வெளியே வந்து வெடிக்க வைக்கிறார்களாம் ).

சினிமா non linear கதையாக சொல்லப்படுவதால், அதற்கு சற்றே முன் கமலஹாசன் மகனுக்கு கமலஹாசன் உண்மையான அப்பாவா, தத்து எடுத்த அப்பாவா அல்லது மாமாவா என்று தெரியாத நிலையில், அவர் உண்மையான அப்பாவாகையினால் போதை மருந்துக்கு கும்பலைக் கண்டுபிடித்து தாய்நாட்டைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். ஆகவே ஒரு விபச்சாரி வீட்டிற்குள் போய் சுவரேறி குதித்து அங்கே சிக்னல் வராத இடத்தில் ஒரு டேட்டா கார்டை ஒளித்து வைத்து, அதில் ரகஸ்யங்களை கண்காணிக்க.. ரொம்ப குழப்பமாக இருக்கிறதா? இதுக்கே தலை சுத்துதுன்னா எப்படி? இன்னும் நிறைய சரக்கு இருக்கே. பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்? இன்னும் போலீஸ் குடும்பக் கல்யாணத்துல பூந்து பொண்ணோட அப்பாவான போலீஸ் அதிகாரியை கொலை செய்வதற்காகக் கடத்தி ஒத்தை பைக்கில் பின்னால டபுள்ஸ் உட்கார வச்சு 100 ரவுடிகள், 200 போலீஸ்கள், 20 ஜீப்களால் பிடிக்க முடியாதபடி கடத்தின காட்சியை பார்க்கக் கண் கோடி வேண்டும். ரகசிய போலீஸ் பெண்மணி வீட்டு வேலைக்காரி, சமையல்காரியாக நடிக்கிறார். பெரிய கத்தி, துப்பாக்கி கையில் கிடைத்தாலும் அதற்கு பதிலா fork , spoon இரண்டை மட்டுமே வைத்துச் சண்டை செய்து 20ஆயுதம் தரித்த கூலிப்படையாளர்கள் கொல்வது எல்லாம் ரொம்ப ஸ்பெஷல் ஐட்டம். பின்ன அவங்க சமையல்காரி ஆச்சே.

அப்புறம் கமலின் மகனுக்கு ஒரு குழந்தை இருக்கிறதே? அந்தப் பேரக் குழந்தைக்கு ஏதோ ஒரு எபிலெப்ஸி சீஷர் வியாதியாம் (கமல் படம்னா எல்லாமே ஸ்பெஷல் ஐட்டமாத்தான் இருக்கும். வியாதி கூட), அதனால் சப்தம் கேட்டால் அழ ஆரம்பித்துவிடுவான். ஆகவே மகன் ஈமச்சடங்கில் யாரையும் அழகூடாதென்று சொல்லி வெளியேறச் சொல்கிறார். ஆனால் குழந்தையுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுக்கிறார். (ஒரு வேளை துப்பாக்கி சப்தம் மட்டும் வீரக் குழந்தைக்கு பிடிக்குமோ? ஸ்பெஷல் குழந்தை ஆச்சே). பின்பொருநாள் குழந்தையைக் கடத்திவிட்டால், கமலை மிரட்டி பிளாக் மெயில் செய்து, போதைமருந்தை மீட்டுக்கொள்ளலாம் எனத்திட்டமிடும் போதை மருந்து கடத்தல் கும்பலை, கொக்கைன் கண்டயினர் ஒளிக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு கைக்குழந்தையை தோளில் போட்டுகொண்டு வரவழைத்து சுடுகிறார். இதயத்துடிப்பற்ற அந்தக் குழந்தையிடம் உனக்கும் எனக்கும் சாவைப் பாத்துட்டு வர்றது புதுசு இல்லை என்று வசனம் பேசுகிறார் பகுத்தறிவுவாதி கமல், பிறகு குழந்தைக்கு CPR கொடுத்து பிழைக்க வைக்கிறார்கள்.

கமல் அந்த நேரத்தில் எதிர்களை சுட்டுக் கொல்கிறார் – குழந்தையின் ஒவ்வொரு இதய துடிப்புக்கான அழுத்தத்துக்கும் ஒரு எதிரியை சுடுகிறாரா? 100 கடத்தல் கும்பல் ஆட்கள் துப்பாக்கியால் இவரை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது , திருப்பிச் சுட இடம் வாகாக இல்லை, எதிரிகளின் மத்தியில் போனால் சுற்றி சுற்றி சுடலாம்(??) என்று ஒரு பெரிய துப்பாக்கி சுற்று மிஷினை தரதரவென மணலில் இழுத்துக்கொண்டு 20 அடிதூரம் நடக்கிறார் கமல். அதற்கு ஸ்பெஷலாக “he is a ghost” என்று இங்கிலிஷ் பாட்டு வேறு பின்னணி இசை. அதாவது கமல் உயிரற்ற பேயாம்!! “வேற லெவல் வேற லெவல்” என்று தியேட்டரில் கைதட்டல். அதைப் பார்ப்பதாலோ என்னவோ அந்தக் கருவிக்கு முன் இழுத்துக்கொண்டு நடப்பவரை எளிதாகச் சுட வேண்டிய 100 துப்பாக்கி கும்பல் சுடாமல் மலைத்து நிற்கிறது. பிறகு அந்த துப்பாக்கியை வைத்து ஒவ்வொருவராக சுற்றி சுற்றி சுடுகிறார் கமல். யாரும் அவரை மட்டும் சுடவேயில்லை. 100 பேரும் செத்த பிறகு வில்லனிடம் உதை வாங்கி மயக்கமடைகிறார். பிறகு இவரின் பேரக்குழந்தை அழும் குரல் கேட்டு உயிர்த்தெழுகிறார் பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன். உண்மையில் இந்தக் குழந்தையை அவரின் கட்சிக்கு உருவகப்படுத்தி இருக்கிறார் – அது சரியே. இந்தக் குழந்தைக்கு தீராத வியாதி இருக்கிறதே.

வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு போதை மருந்து சாப்பிட்டால் வேகமும், திறமையும், யானை பலமும் வருகிறது என்பதை திரும்பத்திரும்ப படத்தில் காட்டுகிறார் கமல்ஹாஸன். கமல்ஹாசனுடன் ரகஸ்ய போலீசாக வேலைசெய்த மிகப்பெரும் திறமைசாலிகள் விஜய் சேதுபதியை நன்றாக அடிக்கிறார்கள். அதே விஜய் சேதுபதி போதை மருந்து சாப்பிட்டுவிட்டு பலம் வந்து அவர்களைப் பந்தாடுகிறார். கமலையும் கூட போதை மருந்து சாப்பிட்டவுடன்அடித்துப் பின்னுகிறார். அதாவது கொக்கைன், சாப்பிடுபவனை தவறாமல் வீரனாக்குகிறது. ஆனால் நம்புங்கள் இது போதை மருந்துக்கெதிரான சினிமாவாம். கமலுடன் வேலைசெய்த பெரும் நேர்மையான திறமையான அதிகாரியாம் டைரக்டர் சந்தான பாரதி – ஜிம் ஓனராம். அவர் கமலைப் பற்றிய விஷயங்களை தெளிவாக துப்பறியும் அதிகாரி பஹத் ஃபாஸிலிடம் அவரே போட்டுக் கொடுப்பாராம். முரண்பாடுகளும், முட்டாள் தனங்களும் உச்சம். சாதாரணமாகவே நடிக்கத்தெரியாத விஜய் சேதுபதியின் நடிப்புக்குறைவைப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் அவரின் மேனரிசம் வெறும் முனகலாக இன்னும் குறைக்கிறது.

கிளைமாக்ஸ்: சினிமா முடியும் போது , வில்லன் விஜய் சேதுபதியின் ரகசிய தலைவனாக கடைசியில் ரோலக்ஸ் (சூர்யா) வருகிறார். படுபயங்கரமான வில்லனாம் – அதைக் காண்பிக்க கூட்டாளி ஒருவனின் கழுத்தை வெட்டுகிறார். அது விக்ரம் – 3 க்கான அடித்தளமாம். ரோலக்ஸை சந்திக்க ஏராளமான போதைமருந்து கும்பல் லீடர்கள் வரும்போது கமல்ஹாசனால் சுட்டுக் கொல்லப்பட்ட சிலரும் வருகிறார்கள்!!! என்பது பகுத்தறிவின் உச்சம். அவர்கள் கமல்ஹாசன் எல்லாரையும் கொன்று, எல்லா போதை மருந்துகளையும் வெடிவைத்து அழித்துவிட்டு வெளிநாட்டுக்கு போய்விட்ட விஷயத்தை ரோலக்சிடம் சொல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஓசைப்படாமல் கமலும் கலந்துகொள்கிறார். (இந்த ஸ்பெஷல் ஐட்டத்தைப் பார்த்து தியேட்டரே கைதட்டுவது நமக்கு நம்நாட்டு இளைஞர்கள் மேல் பெரும் கவலையை வேறுபடுத்துகிறது)

இசை: இசைப் பாடல்கள் என்று ஏதும் இல்லை. அனிருத் இசையாம். ஆகவே சினிமாவுக்கு மிகப் பொருத்தம்.

வசனங்கள்: பாதி கதா பாத்திரங்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. சரியாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை – காலம் நகர்ந்துவிட்டது என்ற தமிழக சூழலைப் புரிந்து கொண்டுள்ளார் கமலஹாசன். 10 வருடம் முன்பு ஒரு டிவி பேட்டியில் “பார்ப்பனப் பெண்கள் தமிழை சரியாக உச்சரிக்க மாட்டார்கள்” என்று இதே கமல்ஹாசன்தான் சொன்னார்.


என் ஹிந்துத்துவப் பார்வை:

கமலஹாசன் தன் கோமாளித்தனத்தால் ரசிகர்களை புளகாங்கிதம் அடைய வைக்கும் சினிமாக்களை பார்த்திருக்கலாம். அன்பேசிவம், மன்மதன் அம்பு – கமல்ஹாஸன் பைத்தியம் என தெரிய வைத்தவை; அவர் இயல்பாக நடித்த சிப்பிக்குள் முத்து, குணா போன்றவற்றில் பாத்திரத்துடன் ஒன்றி பைத்தியமாகவே வாழ்ந்திருப்பார். ஆனால் இந்தப் படம் வித்தியாசமானது – இதில் பார்ப்பவர்கள்தான் பணம் கொடுத்து பைத்தியமாவது. டிராகுலா படங்களில் கடிக்கப்பட்டோரெல்லாம் டிராகுலாவாக மாறி பிறரைக் கடிப்பார்கள் – அதுபோன்று இந்தப் படத்தில் பார்க்கிறவர்களை எல்லாம் தன்னைப்போன்றே நெறி பிறழ்ந்த, மனம் பிறழ்ந்த பைத்தியங்களாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் கமலஹாசன். சினிமா முழுவதுமே வன்முறை, கழுத்தை அறுத்தல் , விரல்களை ஓடித்தல் என்று வெறியாட்டம். மும்முறை இந்தப்படத்தில் கழுத்து அறுக்கப்படுவது கமல் செய்திருக்கும் ஒரு ஸ்பெஷல் புதுமை. பொதுவாக சினிமா பார்ப்பவர்களின் கழுத்தைத்தான் கமல் அறுப்பார்.

சினிமாவில் உள்ள பாத்திரங்கள், நடிகர்கள், எல்லோருமே திமுகவினால் கொம்பு தீட்டி வளர்க்கப்படுபவர்கள். ஜெ மறைந்தபின் அதிமுக அரசை எதிர்த்துப் பேசி அடங்காப்பிடாரிகளாக இருந்துவிட்டு பின்பு திமுக ஆட்சி வந்தவுடன் அடக்கம் அமரருள் உய்க்கும் என உணர்ந்தவர்கள். இதில் கமல்ஹாஸனின் வசனங்கள் வேறு “சிஸ்டம்”, “விடியல்”, “மையம்”, “வெளிச்சம் பாய்ச்சல்” (டார்ச் லைட் சின்னம்) போன்ற இவரின் மக்கள் நீதி மையம் கட்சி சம்பந்தமான திமுக சார்புச் சொற்களைக் கொண்டுள்ளது. ஆக முட்டாள் ரசிகர்களில் 1% பேர் ஏதோ கமல்ஹாசன் அர்த்த புஷ்டியாய் செய்வதாயும், “வேற லெவல்” என்றும், சிலர் அவரின் மேட்டிமைத்தனத்தில் பிரதிபலிக்க முயற்சித்தும் கமல் பக்கம் சாய்வார்கள். தமிழக தேர்தல்கள் 234 தொகுதிகளில் பெரும்பாலும் 1%-3% ஒட்டு வித்தியாசங்களால் நிர்ணயிக்கப் படுபவை. இந்த கமலின் மேட்டிமை பாமரத்தன ரசிகர்கள் பிரிக்கும் 1% ஒட்டு திமுகவுக்கு தோதாக அமையக்கூடும். இதன் மூலம் க மலஹாஸனுக்கு பெரும் தொகை திமுகவிடம் இருந்து கிடைக்குமோ என்னவோ? இந்த சினிமாவை விட அரசியல் வழியில் பணம் பண்ணவே இந்த சினிமா உதவும் என்று தோன்றுகிறது. போதை மருந்தைக் குறை சொல்பவர் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் பேர்களுக்கு மேல் பலிவாங்கும் மது விற்பனையைச் சாடி ஒரு வார்த்தையும் பேசவில்லை – நேரெதிராக படம் நெடுக மதுவை இஷ்டத்திற்குக் குடிக்கிறார் – சினிமாவில் எல்லாருமே குடிக்கிறார்கள் (கல்யாணம் என்றால் தாலி , கோவில் கூட வேண்டாமாம், நண்பர்களுடன் மது மட்டும் போதுமாம்)

கமல்ஹாசனின் சினிமாக்கள் உண்மையில் அவரின் ஆல்டர் ஈகோ. வாழ்க்கையில் தன் மனைவிகளிடம் சற்றும் விசுவாசமற்ற ஸ்திரீலோலனான அவர் இந்தப் படத்தில் விபச்சாரியை பணம் கொடுத்தபின்னும் கண்ணியத்துடன் நடத்துபவராகவும் காட்ட எத்தனிக்கிறார். 6 வருடம் முன்பு கருணாநிதி இருந்த ஒரு மீட்டிங்கில் நடிகர் அஜித் “திமுகவினர் மிரட்டி நடிகர்களை வரவைக்கின்றனர்” என பகிரங்கமாக குற்றசாட்டு வைக்க, கருணாநிதிக்கு வலப்பக்கம் இருந்த ரஜினி தைரியமாகக் கைதட்டினார். ஆனால் இடப்பக்கம்கமல்ஹாசனோ பயத்தோடு தரையை வெறித்துக்கொண்டிருந்தார். வலம் எப்போதுமே இடதுக்கு உயர்வுதான். அந்த அளவு தொடை நடுங்கியான கமல்ஹாஸன் அதற்கு நேரெதிரான வீரமுள்ள புரட்சியாளனாக காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளார். நாட்டின் மீது அக்கறை இருப்பதாகக் காட்டத்துடிக்கும் கமல் உண்மையில் திருமணம், போலீஸ்,ஒழுக்கம், நெறிகள், முறைகள், கள்ளுண்ணாமை எல்லாவற்றையும் உதாசீனப் படுத்தியுள்ளார். இதைக்காணும் ஒரு தலைமுறைக்கே இவரின் படங்கள் கேடாய் அமைவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.

சினிமாவிட்டு வெளியே வரும்போது ஒரு கமல் ரசிகர் வாயை ஆட்டிக்கொண்டிருந்தார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘ஓட்டை வடை சாப்பிடறேன். செம டேஸ்ட்’ என்றார் . ‘வடை இருக்கற மாதிரி தெரியலையே?’ என்றேன். ‘தெரியாது ஏன்னா ஓட்டை வடைய விடப் பெரிசு’ என்று சொல்லி மேலும் மென்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.