துரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடி


மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிரடி அரசியல் நிகழ்வுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உள்கட்சியில் ஏற்பட்ட கலகத்தால் பதவி விலக, சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆகியிருக்கிறார் (ஜூன் 30). முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

பாஜகவின் சித்தாந்தரீதியான தோழராக இருந்த சிவசேனையின் வீழ்ச்சி மிகவும் பரிதாபத்துக்குரியது. சுயநலம் காரனமாகவும் பாஜக மீதான பொறமை காரணமாகவும் அக்கட்சி தனது தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சி செய்த துரோகத்துக்கு அதே பாணியிலேயே பாஜக தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

1966இல் சிவசேனை தோற்றுவிக்கப்பட்டபோதும், மாநிலம் முழுவதும் வலுவான அடித்தளம் கொண்டிருந்தபோதும், 1990 வரை அக்கட்சியால் பெரிய அளவில் சாதனை படைக்க முடியவில்லை. 1989இல் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்த பிறகே அக்கட்சியின் வளர்ச்சி வேகமெடுத்தது. அதை அக்கட்சி மறந்ததால் இன்று நடுத்தெருவில் நின்று புலம்பும் நிலைக்கு வந்துவிட்டது.

சிவசேனையின் தோற்றமும் வளர்ச்சியும்

மொழி அடிப்படையில் பம்பாய் மாகாணம் குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மராத்திப் பெருமிதத்துடன் மாநில பிராந்தியவாதம் அங்கு தலைதூக்கத் துவங்கியது. கர்நாடகத்துடன் இணைந்த மராத்தி மொழி பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தவிர, நாட்டின் பொருளாதாரத் தலைநகராக வளர்ந்து வந்த மும்பையை நோக்கி பிற மாநில மக்கள் வரத் துவங்கியது உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் தான், மராட்டியம் மராட்டியருக்கே என்ற கோஷத்துடன் பத்திரிகை கார்ட்டூனிஸ்டான பாளாசாகேப் பால் தாக்கரே (1926- 2012), சிவசேனை கட்சியை 1966இல் நிறுவினார்.

அதிரடி அரசியல்வாதி: சிவசேனையின் நிறுவனர் பால் தாக்கரே

மராட்டியப் பேரரசர் வீரசிவாஜியின் சைனியம் என்ற பொருள்படும் வகையில் தனது கட்சிக்குப் பெயர் சூட்டிய பால் தாக்கரே, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வந்தார்.

சிவசேனையின் ஆரம்ப நாட்களில் தென்னிந்தியர்களுக்கு – குறிப்பாக மதராஸிகளுக்கு எதிராகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அக்கட்சியினர் நடத்திய வன்முறைகளால் மாநிலம் முழுவதிலும் தாக்கரே பிரபலம் ஆனார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக தன்னை சிவசேனை முன்னிறுத்திக் கொண்டபோது, மொழிச் சிறுபான்மையினர் மீதான தனது எதிர்ப்பை அக்கட்சி மெதுவாகக் கைவிட்டது. பிராந்திய அடிப்படைவாதக் கட்சியான சிவசேனை, ஹிந்து தேசியவாதத்தை தனது அரசியல் கோட்பாடாக அறிவித்துக்கொண்டது.

மிக விரைவிலேயே தானே, மும்பை (1968) மாநகராட்சித் தேர்தல்களில் அதிரடி வெற்றிகளைப் பெற்ற சிவசேனை தனது அடித்தளத்தை மாநிலம் முழுக்கப் பரப்பத் துவங்கியது. ஆயினும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கின் முன்னால் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.  

காங்கிரஸ் கட்சிக்கும் சிவசேனைக்கும் இடையிலான உறவு அவ்வப்போது இனித்தும் கசந்தும் செல்வதாக இருந்தது. சிவசேனையின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தது. மும்பையில் தொழிற்சங்கங்களை ஆட்டிப் படைத்துவந்த கம்யூனிஸ்டுகளை முறியடித்து அங்கு சிவசேனையின் தொழிற்சங்கப் பிரிவு வளரத் துவங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சி மறைமுகமாக உதவியது. அதற்கு நன்றிக்கடனாக, தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு சிவசேனை உதவி வந்தது. 1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை ஆதரித்தார் தாக்கரே.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சில மதக்கலவரங்களில் சிவசேனை கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், முஸ்லிம்களின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் அரசியல் கட்சி என்ற பெயரை சிவசேனை பெற்றுவிட்டது. “நான் முஸ்லிம்களின் எதிரி அல்ல; அதேசமயம், இந்த நாட்டின் சட்டங்களை மதிக்காத முஸ்லிம்களின் எதிரி” என்று வெளிப்படையாகவே பால் தாக்கரே அறிவித்தார். மும்பையில் தனி ராஜாங்கம் நடத்திவந்த நிழலுலக தாதாக்களின் கொட்டத்தை தாக்கரேயின் தொண்டர்கள் அடக்கினர். அவரை ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’ என்று சிவசேனைக் கட்சியினர் அழைக்கத் துவங்கினர்.

பாஜகவுக்கும் சிவசேனைக்கும் கொள்கை அடிப்படையில் பிராந்திய அடிப்படைவாதம் தவிர்த்து பிற அம்சங்களில் மாறுபாடு இல்லை. எனவே பாஜகவின் இயல்பான நட்புக் கட்சியாக சிவசேனை அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை முன்னுணர்ந்த பால் தாக்கரே வாஜ்பாய், அத்வானி தலைமையிலான பாஜகவுடன் நெருக்கம் காட்டத் துவங்கினார். 1984லேயே பாஜகவின் சின்னத்தில் சிவசேனை கட்சியினர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், இந்திரா காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் பாஜகவும் சிவசேனையும் காங்கிரஸிடம் தோல்வியுற்றன.

ராமகோயில் இயக்கமும் சிவசேனையும்

அடுத்து அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமி மீட்பு இயக்கம் 1986இல் துவங்கியபோது, அதன் அதிதீவிர ஆதரவாளராக சிவசேனை தன்னை முன்னிறுத்திக் கொண்டது. அதன் விளைவாக பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக மாறியது. பாஜக- சிவசேனைக் கட்சி கூட்டணி மகாராஷ்டிரத்தில் வெற்றிக்கனிகளை பறிக்கத் துவங்கியது.

அது ஒரு பொற்காலம்: தே.ஜ.கூட்டணியில் முதன்மைப் பங்காளியாக தாக்கரே.

1995இல் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வர் ஆனார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகியபோது சிவசேனையின் நாராயண் ரானே முதல்வரானார். இந்தக் கூட்டணி அரசில் (1995-1999) பாஜக பேரிடம் வகித்தது.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், தேர்தலில் சிவசேனை வென்றபோதும் தானோ தனது குடும்பத்தினரோ ஆட்சிப் பொறுப்பேற்க தாக்கரே சம்மதிக்கவில்லை. சிவசேனையின் முன்னணித் தலைவர்களையே அவர் முதல்வராக்கினார். 1999 தேர்தலில் தோற்றபோது, சிவசேனை- பாஜக கூட்டணி அங்கு எதிர்க்கட்சியாக விளங்கியது.

1996- 2004இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை பிரதான இடம் வகித்தது. வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது லோக்சபா சபாநாயகராக மனோகர் ஜோஷி தேர்வானார்.

என்றபோதும் கட்சியின் கட்டுப்பாட்டை தன்வசமே தாக்கரே வைத்திருந்தார். அவரது தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சிப் பணிகளில் உதவி வந்தார். இதனிடையே, பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவின் அரசியல் நுழைவு கட்சிக்குள் பூகம்பத்தை உருவாக்கியது. 2005இல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். (இவர் இப்போது பாஜக தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்). அதேபோல, ராஜ் தாக்கரேவும் தனது பெரியப்பாவின் புத்திரபாசத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி சிவசேனையிலிருந்து வெளியேறினார். அவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை என்ற கட்சியைத் துவக்கினார். இக்கட்சி பிரித்த சுமார் 6 சதவீத வாக்குகளால் தான் 2009 சட்டசபைத் தேர்தலில் சிவசேனை கூட்டணி தோல்வியுற்றது.

இதனிடையே மாநில அரசியல் களத்திலும் பெரும் மாற்றங்கள் விளைந்தன. ஆரம்பத்தில் சிவசேனை- பாஜக கூட்டணியில் சிவசேனையே அண்ணனாக இருந்தது. அதாவது அக்கட்சியே அதிக இடங்களில் வெல்லும் கட்சியாக இருந்தது. ஆனால், பாஜகவின் அதிவேக வளர்ச்சி சிவசேனைக்கு ஏற்க முடியாதாததாக இருந்தது. பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே, நிதின் கட்கரி போன்ற தலைவர்களின் செல்வாக்கால் பாஜக சிவசேனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அக்கட்சியின் தேசிய அளவிலான செல்வாக்கும் அதற்கு உதவியது. எனினும் பால் தாக்கரே உயிருடன் இருந்த வரை இரு கட்சிகளிடையே மனஸ்தாபம் ஏற்படவில்லை.

2012இல் பால் தாக்கரே காலமான பிறகு உத்தவ் தாக்கரேவின் கட்டுப்பாட்டில் சிவசேனை வந்தது. அதன் பிறகு அவரது அணுகுமுறை பாஜகவுடன் மோதல் போக்கிற்கு வித்திட்டது.

மாறிய உள்ளம், மாறிய காட்சி

மகாராஷ்டிரத்தில் பாஜக சிவசேனையை விட வலுவாக வளர்ந்ததை உத்தவ் விரும்பவில்லை. 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அதீத பலத்துடன் வென்ற பிறகு கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து செயல்பட வேண்டிய நிர்பந்தமும் பாஜகவுக்குக் குறைந்தது.  இதுவும் இரு கட்சியினரிடையே பிளவு பெருக வழிவகுத்தது.

எதிர்த் துருவங்கள்: உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும்.

2014 சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் சிவசேனையின் ஏற்க முடியாத நிபந்தனைகளால் சங்கடம் ஏற்பட்டது. அதிக இடங்களில் போட்டியிடும் சிவசேனையின் முடிவால் கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்துக் களம் இறங்கின. நான்குமுனைப் போட்டியாக நடந்த அத்தேர்தலில் பாஜக 122 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. (சிவசேனை- 63, தேசியவாத காங்கிரஸ்- 44, காங்கிரஸ்- 42). தேர்தலுக்குப் பிறகு சரத் பவார் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததை அடுத்து, கூட்டணியை அவசரமாகப் புதுப்பித்துக் கொண்டு, அரைமனதுடன் பாஜக கூட்டணி அரசில் பங்கேற்றது சிவசேனை. பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனார்.

இந்த மாற்றத்தை சிவசேனையால் ஏற்கவே முடியவில்லை. ஒருகாலத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசில் உதவியாளராகப் பங்கேற்ற பாஜக, மாநில ஆட்சியைக் கைப்பற்றியதை அக்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் தொடர்ந்து பாஜக விரோதக் கருத்துகளை சிவசேனை பரப்பி வந்தது. இதற்கு காரணமானவர், இன்று ‘சிவசேனையின் சகுனி’ என்று புகழப்படும் சஞ்சய் ரௌத்.

எனினும் அதைக் கடந்து 2019 லோக்சபா தேர்தலில் பாஜக- சிவசேனை கூட்டணி தொடர்ந்து பெரும் வெற்றி பெற்றது. 2019 சட்டசபைத் தேர்தலின் போது மீண்டும் சிவசேனை முருங்கைமரம் ஏறியது. அப்போது மோடி, அமித் ஷா ஆகியோரின் முயற்சியால் கூட்டணி உடையாமல் காப்பாற்றப்பட்டது. அத்தேர்தலில் பாஜக- சிவசேனை கூட்டணி 161 இடங்களில் (பாஜக- 105, சிவசேனை- 56) வென்றது. எதிரணியில் தேசியவாத காங்கிரஸ்-54,காங்கிரஸ்- 44 இடங்களில் வென்றன.

அப்போது மீண்டும் சிவசேனையால் சிக்கல் ஏற்பட்டது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக 161 இடங்களில் வென்றபோதும், சிவசேனை 56 இடங்களில் மட்டுமே வென்றபோதும், தனக்கே முதல்வர் பதவி அளிக்க வேண்டும்; 2.5 ஆண்டுகளில் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்தது. இதனால் கூட்டணி உடைந்தது.

எனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உதவியுடன் அரசு அமைக்க முயன்றது பாஜக. ஆனால், சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியை அமைத்து, பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தின. அக்கட்சியினரின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

நம்பிக்கை துரோகத்துக்கு துரோகமே பரிசு

உத்தவ் தாக்கரே தேர்தலுக்கு முன் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை மறந்து, தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஒரு ஒவ்வாத கூட்டணியாகவே மாநில மக்களால் பார்க்கப்பட்டது. ஏனெனில் மோடி தலைமையில் பிரசாரம் செய்து ஈட்டிய வெற்றியை தனது சுயநலனுக்காக அடகு வைத்தார் உத்தவ் தாக்கரே. அக்கட்சிகளும் பாஜகவின் தொடர் வெற்றிமுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவசேனையை ஆதரித்தன. மூன்று கட்சிகளும் தங்கள் கொள்கைகளை அடகு வைத்து, ஆட்சிக்கட்டிலில் ஏறின.

மருந்தான கலகம்: அதிருப்தி சிவசேனை எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே

இது ஒரு வகையில் வாக்களித்த வாக்காளர்களின் முதுகில் குத்துவது போன்றது. வாக்காளர்களின் தேர்வுக்கு மாறாக பொருந்தாக் கூட்டணி அமைத்தது சிவசேனை. அது மட்டுமல்ல, அதுநாள் வரை தான் கடைபிடித்துவந்த ஹிந்து தேசியவாதக் கொள்கைகளையும் மூட்டை கட்டி பரணில் கிடாசியது.

தன்னை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு பசையான துறைகளை ஒதுக்கினார் முதல்வர் உத்தவ் தாக்கரே. உண்மையில் அந்த அரசு, சரத் பவாரின் கண்ணசைவில் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை அரசாகவே இருந்தது. அதுநாள் வரை ஹிந்து தீவிரவாதியாக இருந்த சிவசேனை கட்சி, ஒரே நாளில் மதச்சார்பற்ற கட்சியாகி விட்டது!

சிவசேனையை எதிர்த்தவர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டனர். நடிகை கங்கணா ரனாவத், ரிபப்ளிக் டி.வி பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி, எம்.பி.யும் நடிகையுமான நவ்னீத் ரானா ஆகியோர் சிவசேனை கூட்டணி ஆட்சியில் மிக மோசமாகப் பந்தாடப்பட்டனர். 2020 ஏப்ரலில் பால்கரில் இரு ஹிந்து சாதுக்கள் கம்யூனிஸ்டுகளால் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டபோது மாநில அரசு வேடிக்கை பார்த்தது.

மாநில அரசில் ஊழலும் அதிகரித்தது. தவிர, சிவசேனையின் அடுத்தகட்டத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனால் மக்களிடையேயும் கட்சிக்குள்ளும் அதிருப்தி பெருகி வந்தது.

காவல் துறையை ஏவல் துறையாக்கி சிவசேனை நடத்திய அராஜகத்தால் மகாராஷ்டிர அரசின் நம்பகத்தன்மை குலைந்தது. நடிகர் ஷாரூக் கான் மகன் போதைப் பொருளுடன் உல்லாசக் கப்பலில் சிக்கிய விவகாரம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, மாநில அமைச்சர் நவாப் மாலிக் உத்தரவுப்படி மும்பை காவல் ஆணையர் லஞ்சம் வசூல் செய்தது என, காவல் துறையின் மானம் சந்தி சிரித்தது. சமூக ஊடகங்களில் சிவசேனையை விமர்சித்தவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறாக காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் துவங்கின. அவற்றின் குவி மையமாக தானே வட்டார சிவசேனைத் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே இருந்தார். எனவே அவரையும் உத்தவ் ஓரம் கட்டினார். இதனால் உள்கட்சிக்குள் பூகம்பம் உருவாகி வந்த்து.

ஜூன் மாதம் இரண்டாம் வாரம் நடந்த ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலிலும் அடுத்து நடந்த மாநில மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் பலர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அப்போதும் உத்தவ் தாக்கரே திருந்தவில்லை.

அதன் தொடர்ச்சியாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சிவசேனை எம்.எல்.ஏக்களும், 12 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் சூரத்துக்கும் கௌஹாத்திக்கும் சென்றனர். உடனே அவர்களது குடும்பங்கள், வீடுகள் மீது சிவசேனை ரௌடிக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், அவர்களது எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்கவும் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்க முனைந்தார்.

288 மொத்த உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மை பெற 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. உண்மை என்னவென்றால் மொத்த சிவசேனை எம்.எல்.ஏக்களான 56 பேரில் 40 பேருக்கு மேல் ஷிண்டேவுடன் இருந்தனர். அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு செய்ய முடியாது.

சிவசேனை உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அதிருப்தியாளர் ஷிண்டேவை ஆதரித்ததால், உத்தவ் அரசு சிறுபான்மை அரசானது. அதிருப்தியாளர்கள் தொடுத்த நீதிமன்ற வழக்குகளால் உத்தவின் சதி நிறைவேறவில்லை. கடைசிக் கட்டத்தில் உத்தவ் தாக்கரேவை சிவசேனையின் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரித்தனர். எனவே உத்தவ் பதவி விலகினார்.

இந்த இடத்தில் தான் திடீர் திருப்பமாக – மாநில முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் – அவரே, மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார். இது பாஜக தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு என்பதும் அதை அவர் மனப்பூர்வமாக ஏற்றதும் அரசியல் களத்தை வியப்பில் ஆழ்த்தின. ராஜதந்திரி என்று பெயர்பெற்ற சரத் பவாரே இதனை எதிர்பார்க்காமல் ஆடிப் போயிருக்கிறார்!

இந்தத் திடீர் மாற்றத்தால், ஏக்நாட் ஷிண்டே மாநில முதலவராகவும், பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். பாஜகவைப் பொருத்த வரை கட்சிக் கட்டுப்பாடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதும், பதவியை விட கட்சி முன்னெடுக்கும் முடிவே பிரதானம் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இது முதுகில் குத்திய துரோகிகளுக்கு பாஜகவின் தரமான பதிலடி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பதவியாசையால் சிவசேனையின் ஆட்சியைக் கவிழ்த்தது என்று, இனி பாஜக மீது அபவாதம் பேச முடியாது. ஏனெனில் முதல்வர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறார். சிவசேனை அதிருப்தி அணியின் ஆட்சியே தொடர்கிறது. இது ஒரு அற்புதமான காய் நகர்த்தல் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முதல்வராக வாய்ப்பு இருந்தும் பாஜக அதைத் தவிர்த்து ஷிண்டேவை முதல்வர் ஆக்கியிருப்பதில் வேறு பல கணக்குகளும் உண்டு என்கிறார்கள். ராஜ் தாக்கரேவும் பாஜகவை நெருங்கி வருகிறார். மகாராஷ்டிரம் கடந்த ஆண்டுகளில் அடைந்த சீரழிவுகள் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

வரும் நாட்களில் சிவசேனை கட்சியினர் பெருவாரியாக ஷிண்டே தலைமையை ஏற்க வாய்ப்புள்ளது. அப்போது உத்தவும் அவரது மகனும் மட்டுமே சிவசேனையில் இருக்கும் நிலை ஏற்படலாம். அரசியல் துரோகி சிவசேனைக்கு பாஜக அளித்திருக்கும் இந்த விநோத தண்டனை சுயநலக் குடும்ப  அரசியல்வாதிகளுக்கு காய்ச்சல் ஏற்படுத்தி இருக்கும். ஷிண்டே- பட்னவிஸ் கூட்டணி ஆட்சி சிறப்புற நடைபெறுமானால், எதிர்காலத்தில் மகாராஷ்டிர மாநில அரசியலில் பாஜகவின் செல்வாக்கு உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.

Source link

Leave a Reply

Your email address will not be published.