குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்


க்³ருʼணாதி உபதி³ஶதி இதி கு³ரு: – உபதேசிப்பவர் குரு.

சமஸ்கிருத மொழியில் ‘குரு:’ என்ற சொல்லுக்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. பாரம்பரியமாக முன்னோரிடமிருந்து கிடைத்த ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் தன் சொந்த அனுபவத்தோடு சேர்த்து எளிதாகவும் சூட்சுமமாகவும் வாத்சல்யத்தோடும் சீடனுக்கு அளிக்கும் குரு மும்மூர்த்திகளுக்குச் சமம் என்று வேதம் கூறுகிறது.

வித்யை என்பது ஞானம், விஞ்ஞானம் இரண்டும் சேர்ந்தது. அதாவது பரா வித்யை, அபரா வித்யை இரண்டும் இணைந்தது. இதில் பரா வித்யை இறைவனை அறிவதற்கும் அபரா வித்யை லௌகீகமான வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன.

சீடன் குருவை விட எப்போது உயர்ந்தவனாகிறான்?

குருவை கடவுளாக எண்ணும் குருபக்தி உள்ள ஒவ்வொரு சீடனும் தன் குருவை விட உயர்ந்து விடுகிறான். உதாரணத்திற்கு வியாசரும் சுகபிரம்மமும். பாரத தேசத்தின் சம்பிரதாயப்படி குரு சிஷ்ய உறவு ஒரு இனிய நீரோட்டம் போன்றது. உயர்ந்த பனிப் பாறைகளைப் பாருங்கள். அவை குருவுக்கு அடையாளம். அவற்றின் மீதிருந்து பாயும் கங்கையை தரிசியுங்கள். அது சீடனுக்கு அடையாளம். அதாவது நம்மைச் சுற்றி உள்ள இயற்கைலேயே குரு சீட சம்பந்தம் நிறைந்துள்ளது. அதனால்தான் இயற்கையே முதல் குரு என்பார்கள். (Nature is our Teacher). அப்படிப்பட்ட மிக உன்னதமான குரு சம்பிரதாயத்தின் ஆதி குரு பாதராயண மகரிஷி. இவரையே கிருஷ்ண துவைபாயனர் என்றும் வேத வியாசர் என்றும் அழைக்கிறோம்.

ஆஷாட (ஆடி) மாதம் பௌர்ணமி திதியை வியாச பௌர்ணமியாக கடைபிடிக்கிறோம். பண்டைய குருகுலங்களில் இன்றைய நாளில்தான் ‘சமாவர்த்தன உற்சவம்’ (தற்காலத்தில் பட்டமளிப்பு விழா) நடத்துவார்கள்.

நமோ(அ)ஸ்து தே வ்யாஸ விஶாலபு³த்³தே⁴
பு²ல்லாரவிந்தா³யதபத்ரநேத்ர ।
யேந த்வயா பா⁴ரததைலபூர்ண:
ப்ரஜ்வாலிதோ ஜ்ஞாநமய: ப்ரதீ³ப:॥

குரு சீட சம்பிரதாயத்திற்கு மூல புருஷரான ஸ்ரீவியாச பகவானை நினைத்துத் தொடங்கினால் அறிவுப் பெரும் முயற்சியில் தடைகள் இருக்காதென்று சாட்சாத் விநாயகரின் வாயால் கூறப்பட்ட தியான சுலோகம் இது.

நிருக்தம் கூறும் பொருள்:-

வேதத்தின் ஒரு பகுதியான நிருக்தம் வியாச பகவானை இவ்விதம் புரிந்து கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது… வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம். வேத வியாசர் என்ற சொல்லுக்கு நிருக்தம் கூறும் உட்பொருள் இது.

குருவின் கோபம்:-

நம் கலாசாரத்தில் குரு என்பவர் பரா, அபரா வித்யைகளை அளிப்பவர். பரம்பொருளை அடைவதற்கு ஒளிபொருந்திய வழி காட்டுபவர். சிவபிரானின் கோபத்தைக் கூட குரு நீக்கக்கூடியவர். அப்படிப்பட்ட குருவுக்கு கோபம் வந்தால் பரமசிவன் கூட எதுவும் செய்ய இயலாது. அனைவருக்கும் குருகிருபை என்பது மிகவும் முக்கியம்.

குருவுக்கு சிரத்தையோடு சேவை செய்து உயர்ந்த இடத்தை அடைந்தவர்களுள் ராமர், கிருஷ்ணர், பாண்டவர்கள், பக்த கண்ணப்பா, சுகர், சத்தியகாம ஜாபாலி போன்றோர் புகழ் பெற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர். குருவை நிராகரித்த அருணி, கர்ணன் போன்றோர் தோல்வியடைந்தனர். அருணி குருவிடம் கற்ற கல்வி அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது.

குருமந்திரத்தின் உயர்வு:-

அதனால்தான் குருவுக்கு கௌரவம் அளிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டி, குரு மந்திரம் நம்மை பவ சாகரத்திலிருந்து உய்விப்பதற்கு மிக மிக தேவை என்று குருகீதையில் உள்ள இந்த சுலோகம் குறிப்பிடுகிறது.

ஸம்ʼஸார-ஸாக³ர-ஸமுத்³த⁴ரணைக-மந்த்ரம்
ப்³ரஹ்மாதி³-தே³வ-முநி-பூஜித-ஸித்³த⁴-மந்த்ரம்॥
தா³ரித்³ர்ய-து³꞉க²-ப⁴ய-ஶோக-விநாஶ-மந்த்ரம்
வந்தே³ மஹா-ப⁴ய-ஹரம்ʼ கு³ரு-ராஜ-மந்த்ரம்॥

நம்மை நல்வழியில் நடத்துவிப்பதற்கு குரு நம்மை தண்டித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பகையை வளர்த்துக் கொண்டு குருவை தூஷிப்பதோ துன்புறுத்துவதோ கூடாதென்று ‘குரு சதகம்’ போதிக்கிறது.

அதிர்ஷ்டசாலி குரு யார்?

தனக்கு கல்வி போதிக்க மாட்டேன் எனறு நிராகரித்த குருவுக்கு விரலை வெட்டிக் கொடுத்த சீடன் ஒருவன். குருவின் புத்திர சோகத்தைப் போக்கடிப்பதற்கு வருண தேவனையே சபிப்பதற்கு பின்வாங்காத சீடன் ஒருவன். இதே வரிசையில் பயணித்து தன் குருவின் ஆசீர்வாத பலத்தோடு திக்பாலகர்களையே எதிர்த்த உதங்கன் போன்ற சிஷ்ய இரத்தினங்களை அடைந்த அந்த குருமார்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

குரு நிந்தை?

குருவையே கடவுளாக எண்னும் சீடர்கள் குரு நிந்தையை காதால் கூட கேட்க மாட்டார்கள் என்று ‘குரு ரத்னாகரம்’ போதிக்கிறது.

கு³ரோர்யத்ர பரீவாதோ³ நிந்தா³ வாபி ப்ரவர்ததே ।
கர்ணௌ தத்ர பிதா⁴தவ்யௌ க³ந்தவ்யம்ʼ வா ததோ(அ)ந்யத꞉ ॥

பொருள்: தன் குருவை யாராவது நிந்தித்தால் சீடன் அந்த நிந்தையை காதால் கேட்கக் கூடாது. காதுகளை கெட்டியாக மூடிக்கொண்டு சிவ சிவ என்று கூறவேண்டும். அல்லது அங்கிருந்து சென்று விட வேண்டும். குருவை நிந்திப்பதற்கு காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே முறையை பின்பற்ற வேண்டும். குரு உண்மையில் நிந்தைக்கு தகுதிள்ளவரே என்று தெரிந்தாலும் கூட குரு நிந்தையை கேட்கக் கூடாது. குரு நிந்தையை காதால் கேட்பதோ உற்சாகப்படுத்துவதோ நரகத்திற்கு வழி வகுக்கும் என்று மனுதர்ம சாத்திரம் தெரிவிக்கிறது.

குரு ஏன் தேவை?

பெண்ணிற்கு தாய்மை முழுமையளிப்பது போல் இல்லறத்தானுக்கும் பிரம்மச்சாரிக்கும் குருவின் சத்சங்கம் பரிபூரணத்தை அளிக்கிறது. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்டவர்களே சத்குருமார்கள். அவர்கள் நமக்கு அளிப்பதே உண்மையான அறிவு.

குரு போதிக்காத கல்வி குருடு என்ற பழமொழி கூட உள்ளது. குருவின் தத்துவ ஜோதியை கவரும் சக்தி யாரிடம் உள்ளதோ அவரே குருவின் கிருபையைப் பெற்று உத்தம சீடமாரக வளர்ச்சி அடைவார்.

போலி குருமார்கள்:-

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சுலோகத்தில் கூறப்படுவது போன்ற குருமார்களே அதிகமாக தென்படுகிறார்கள்

அவித்³யாயாமந்தரே வர்தமாநா꞉
ஸ்வயம்ʼ தீ⁴ரா பண்டி³தமந்யமாநா꞉।
ஜம்ʼக⁴ந்யமாநா꞉ பரியந்தி மூடா⁴
அந்தே⁴நைவ நீயமாநா யதா²ந்தா⁴꞉॥

பொருள்: மூடர்கள் அறியாமை இருளில் அலைந்தபடி தாம் அறிஞர்கள், தம்மை விட தீரர்கள் இல்லை என்று கூச்சலிட்டுக் கொண்டு குருடர்களால் வழிநடத்தப்படும் குருடர்களின் ஆதரவைப் பெற்று பிரமையில் ஆழ்ந்திருப்பார்கள்.

தற்கால உலகமெங்கும் மேற்சொன்ன குருமார்களால் நிறைந்திருப்பது கவலைக்குரியது. பொருளாசை கொண்ட குருமார்களிடையே பரபிரம்மத்தை போதிக்கும் குருவை அடையாளம் காண்பது உண்மையில் கத்தி மேல் நடப்பது போன்றது. ஒருவேளை இதனை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு விளக்கினார் போலும்…

ஆசார்யம்ʼ மாம்ʼ விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் ।
ந மர்த்யபு³த்³த்⁴யாஸூயேத ஸர்வதே³வமயோ கு³ரு: ॥

பொருள்: One should know the Acārya as Myself and never disrespect him in any way. One should not envy him, thinking him an ordinary man, for he is the representative of all the gods.

(ஸ்ரீமத் பாகவதம் -11-17-27)

உண்மையான குருபூர்ணிமா எப்போது?

குருமார்கள் தம் குருத்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டு பொருளாசையின்றி ஞானம் நிறைந்தவர்களாய் குருகுலங்களை அரசியல்வாதிகளின் தலையீட்டால் தூய்மைக் கேடடையாமல் மாசுபடாமல் நடத்துவார்களானால் மாணவன் மனம், சொல், செயல் மூன்றும் திரிகரண சுத்தமாக உண்மையான வித்யையை பெற முடியும். அப்போதுதான் குரு சிஷ்யரின் இடையில் தந்தை மகன் உறவு நிலைபெறும். மாணவர்கள் குருவை கத்தியைக் காட்டி மிரட்டாமல் கௌரவமாக, நேர்மையாக தேர்வு எழுத முடியும். மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் வழிமுறைகள் மாறும் போது ஞானமும் விஞ்ஞானமும் நிறைந்த குருமார்கள் அடையாளம் காணப்பட்டு முழுமையான குருஸ்தானத்தில் நிலை பெற முடியும் அப்போது மட்டுமே உண்மையான குருபூர்ணிமா திருநாளின் லட்சியம் பரிபூரணமாக நிறைவேறும்.

(நன்றி: ருஷிபீடம், 2004)

Source link

Leave a Reply

Your email address will not be published.