என் வீட்டில் தேசியக்கொடி – தமிழ்ஹிந்து


தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களை, இங்கிருப்பவர்கள் இருவகையாக மனதில் பிரிக்கிறார்கள்.

” பண்பாடு கலாச்சாரம்னு அலட்டற கேஸ் அல்லது வெளியூர் போயி வெள்ளைக்காரனாயிட்டான் “

இது ஒரு பொறாமையின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். இதிலிருந்து எவரும் தப்புவதில்லை. ஏதாவது ஒரு காரணம்/ ஒரு நிகழ்வு போதும். ஒரு வித சாய்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது.

தேசியக் கொடி தூக்கியவர்களை , ஊர்க்காரர்கள் ” இப்ப எங்கிருந்து நாட்டுப்பற்றெல்லாம் வருது? அலட்டிட்டுத் திரியறான். இந்திக்காரன் சகவாசம்” என்பதும் , வெளிநாட்டில் கொடி தூக்குபவர்களை ” இந்தியர் என்ற அலட்டல். ஊர்ப்பாசம் பொங்குதோ?” என்று கிண்டலாகவும் பேசுபவர்கள் , ‘ சத்தம் போடாம, வூட்டுல யாரோ செத்த மாதிரி துக்கமா நடந்துக்குங்க” என்று அறிவுறை சொல்லுவதும் ஒரு கிணற்றுத் தவளைத்தனம் என்பது அறிவதில்லை.

கம்யூனிஸக் கொள்கை கொண்ட ஒருவன் , 1996ல் அகமதாபாத் ரயிலில் பயணிக்கையில், எதிரே காவி உடை அணிந்திருந்த ஒருவனை , நால்வர் கிண்டலாகப் பேசி அவனது தலைப்பாகையை எடுத்து ஏளனப்படுத்தியததைக், கண்டு கொதித்து, அகமதாபாத் நெருங்குகையில் , இருவர் அந்த கம்பார்ட்மெண்ட்டில் நுழைவதைப் பார்த்ததும், அவசரமாக அந்த நால்வர், ஸ்டேஷன் வருமுன்னே இறங்கி ஓடியதை அவதானித்தான்.

அதன்பின்னான சுதந்திர தின விழாவில் , தன் வாழ்வில் முதன்முறையாக 2 ரூபாய்க்கு சிறிய தேசியக் கொடி வாங்கி வீட்டில் வைத்து, எதிரே கண்டவர்களிடம் சுதந்திர தின வாழ்த்துகள் பரிமாறினான்.

அந்த ஆள் நான் . அன்றிலிருந்து என்றுமே என் வீட்டில் தேசியக் கொடி உண்டு. இந்த மூன்று நாட்கள் நாட்டோடு கொண்டாட்டம்.

குஜராத்தில் பரூச்சில் 144 அறிவித்த நாட்களில் ஸ்டேஷனில் அடைந்து இருந்திருக்கிறேன். சூரத்தில் ப்ளேக் என அறிவித்தபோது அகமதாபாத்தில் நானும் என் மனைவியும் வீட்டோடு நான்கு நாட்கள் அடைந்து கிடந்தோம். கீழ்வீட்டில் இருந்த சீக்கிய அன்னை ரொட்டி கொடுத்து அனுப்புவாள். அவர்கள் வீட்டில் காய்கறி நறுக்கிக் கொடுக்க மங்கை செல்வாள். நடு போர்ஷனில் இருந்த குஜராத்தி, சற்றே இனிக்கும் தால் செய்து வழங்குவார். வயிற்றை நிரப்பியது, அன்று தேசியம் மட்டுமே.

நாங்கள் இருந்த வேஜல் பூர் பகுதியிலிருந்து, பின்னாளில் பெருமளவு பேசப்பட்ட ஜூவா புரா, வெகு அண்மையில் இருந்தது. இரவு நேரம் , நெடுஞ்சாலையிலிருந்து தனியே அதனைத் தாண்டி வேஜல் பூர் வர முடியாது. அகமதாபாத் உள்ளே சென்று , திரும்பி, மறுபுறம் வழியாக வரவேண்டும். ஒரு மணி நேரம் ஆகும்.

இன்று அந்த இடத்தில் பெரிய பெரிய கட்டிடங்கள். விடிய விடிய போக்குவரத்து. பயமில்லை. தேசியத்திற்கு எதிரானவை அங்கிருந்து நீங்கிவிட்டன. இன்றைய வளத்திற்கும், பயமின்மைக்கும் காரணம் இருபுறமும் இருக்கும் தேசியம்.

பிற நாடுகளிலும், பிற ஊர்களிலும், நமது இருத்தலுக்கு அச்சுறுத்தல் வரும்போது, தேசியமும், மனிதமும் பெருகி வரும். இது இயல்பு. தேசியம் தவறு என்பதெல்லாம், we are global citizen என்பவர்களுக்கான முக மூடி. இந்த ஸ்டீஃபன் லீக்காக் கட்டுரை வாசிப்பு எல்லாம் கல்லூரியோடு முடிந்து போனது.

மும்பைக் கலவரங்களின் போது, CGS குவார்ட்டர்ஸில் பாச்சிலராக வாழ்ந்த காலம்… பின் வரிசையில் இருந்த கட்டிடங்களில் இரவு மெஷின் கன் ஓசை கேட்டபடி , உறக்கம் வராமல் அடைந்து கிடந்திருக்கிறேன். ஆறு மணிக்குமேல் வீட்டுக்கு நடந்து வருகையில், இருமுறை போலீஸ் பிடித்துப் போய் அடுத்த நாள் காலை , ஜீப்பில் காவலோடு வீட்டில் கொண்டு விட்டிருக்கிறார்கள். ‘ இப்படி தனியா வராதே, க்ராஸ் ஃபயரில் மாட்டினா செத்தே’.

எனது அடையாளம் என்பதைக் காட்டுவது பிறரை அச்சுறுத்த அல்ல, நமக்கு நாம் இருக்கிறோம் என்ற தைரியத்தை நமக்குள்ளே வளர்க்கவும், இதனைத் தந்த தியாகிகளுக்கு நன்றி சொல்லவும் ஒரு வாய்ப்பு என்ற கருத்தில்

ஸ்வீட் எடு கொண்டாடு.

Source link

Leave a Reply

Your email address will not be published.