கோபால பாலனைப் போற்றுவோம் – தமிழ்ஹிந்து


தெலுங்கில் – பமிடிபல்லி விஜயலக்ஷ்மி
தமிழில் – ராஜி ரகுநாதன்

சுலோகம்:
ஸஜலஜலத³நீலம்ʼ வல்லவீகேலிலோலம்ʼ
ஶ்ரிதஸுரதருமூலம்ʼ வித்³யுது³ல்லாஸிசேலம் .
ஸுரரிபுகுலகாலம்ʼ ஸன்மனோபி³ம்ப³லீலம்ʼ
நதஸுரமுநிஜாலம்ʼ நௌமி கோ³பாலபா³லம்

என்று பால கிருஷ்ணனை வணங்குகிறோம்.

“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்” என்று தன்னை சாமானிய மனிதனாக கூறிக் கொண்ட ஸ்ரீராமன் அளவு கடந்த மகிமையால் புருஷோத்தமனாக கீர்த்தி பெற்றான்.

ஸ்ரீகிருஷ்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடனே தேவகிக்கும் வசுதேவருக்கும் தன் உண்மை சொரூபத்தோடு தரிசனமளித்து, தன் அவதார ரகசியத்தை வெளியிட்டான். சதுர் புஜங்களுடன் தெயவீகமான திவ்ய ஒளியோடு காட்சி தந்தான்.

தேவகியும் வசுதேவரும் முற்பிறவியில் செய்த தவத்தின் பலனாக கண்ணன் அவர்களின் புதல்வனாக பிறந்ததாகத் தெரிவித்தான். பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக யசோதைக்கும் நந்தகோபருக்கும் கண்ணனை வளர்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

அப்போது முதல் கோகுலமும், பிருந்தாவனமும், யமுனா நதியும் பாலகிருஷ்ணனின் விளையாட்டு மைதானங்களாயின. யசோதைநந்தன் கோகுலத்தில் கோபாலனாக வளர்ந்து வெண்ணை தின்று பல திவ்ய லீலைகளை ஆற்றினான். பூதனை முதல் பல அரக்கர்களை வதைத்து அனைவராலும் பாராட்டப்பட்டான். மாடு மேய்த்து புல்லாங்குழல் இசையால் கோப, கோபியரின் பேரன்பைப் பெற்றான். புனித பிருந்தாவன சஞ்சாரியாயாக, யமுனை நதியில் ஜலக்ரீடையாடி கோலோகத்தை பூலோகத்திற்கு இட்டு வந்தான்.

பால கோபாலனின் தெய்வீக லீலைகள், முரளி கான இனிமை, திவ்ய தேஜஸ், அளவுகடந்த வல்லமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கோகுல வாசிகள் கண்ணனுக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்து கொண்டு தம்மை மறந்தார்கள்.

பலர் நந்தகோபாலனை வழிபட்டு உயவடைந்தார்கள். பாலகிருஷ்ணனின் தெய்வீக காதையை தவக் கண்களால் தரிசித்து கவிஞர்கள் பலர் கானம் இயற்றினார்கள். அவர்களில் லீலாசுகர் ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற நூலில் யோக மார்கத்தால் தரிசித்த பால கிருஷ்ண லீலைகளையும் தெய்வீக பிரகாசத்தையும் வாயாரப் புகழ்ந்து பாடினார்.

ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதத்தின் ஒவ்வொரு சுலோகமும் நம் செவிகளில் அமிழ்தைப் பொழிகிறது. உயிருள்ள சிற்பங்களாக நம் கண்ணெதிரே நின்று மனப்பலகை மேல் முத்திரை பதிக்கிறது.

சுலோகம்:
அங்கு³ல்யக்³ரைரருணகிரணைர்முக்தஸம்ʼருத்³த⁴ரந்த்⁴ரம்ʼ
வாரம்ʼ வாரம்ʼ வத³னமருதா வேணுமாபூரயந்தம் .
வ்யத்யஸ்தாங்க்⁴ரிம்ʼ விகசகமலச்சா²யவிஸ்தாரநேத்ரம்ʼ
வந்தே³ வ்ருʼந்தா³வனஸுசரிதம்ʼ நந்த³கோ³பாலஸூனும்

சிவந்த கை விரல்களால் புல்லாங்குழலின் துளைகளை மூடித் திறந்து சிவந்த உதடுகளால் வேணுவிலிருந்து நவரசங்களை எழுப்பி வ்ரஜ வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியபடி ஆனந்த கோபால பாலன் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கையில் பூமாதேவி ஆனந்தத்ததால் உளம் குளிர்ந்தாள்.

சுலோகம்:
பீடே² பீட²நிஷண்ணபா³லகக³லே திஷ்ட²ன் ஸ கோ³பாலகோ
யந்த்ராந்த꞉ஸ்தி²தது³க்³த⁴பா⁴ண்ட³மபக்ருʼஷ்யாச்சா²த்³ய க⁴ண்டாரவம் .
வக்த்ரோபாந்தக்ருʼதாஞ்ஜலி꞉ க்ருʼதஶிர꞉கம்பம்ʼ பிப³ன் ய꞉ பய꞉
பாயாதா³க³தகோ³பிகாநயனயோர்க³ண்டூ³ஷபூ²த்காரக்ருʼத்

பால கிருஷ்ணணனின் சிறு வயதுக் குறும்புகளை கண்ணெதிரில் கொண்டு வருவதில் தேர்ந்தவர் பக்தலீலாசுகர். மேற்சொன்ன சுலோகத்தில் குறும்புக் கண்ணன் இடையர்களின் வீட்டில் செய்த சேட்டைகளை எத்தனை அழகாக வர்ணிக்கிறார் பாருங்கள்!

சின்னக் கண்ணனையும் அவனுடைய குறும்புப் படையையும் கண்டாலே மாடுகள் உள்ள அனைவரின் உள்ளமும் நடுங்கும். அந்த திருட்டுக் குழந்தைகளுக்கு எட்டாமல் உறி கட்டி, அதை யாரேனும் தொட்டால் மணி அடிக்கும்படி ஏற்பாடு செய்து வைத்தார்கள். லீலா மானுட வேடதாரிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

தான் நினைத்த வேலையைச் செய்யாமல் விட மாட்டான் கண்ணன். சத்தம் போடாமல் பலகை மேல் பலகை வைத்து அதன் மேல் ஒரு கோப பாலனை நிற்க வைத்து, அவன் மீது கண்ணன் ஏறி நின்று மணி அடிக்காமல் கவனாமாக உறி மீதிருந்த பாலைத் தானும் வயிறாரக் குடித்து தன் தோழர் குழாத்திற்கும் தரையாக ஊற்றினான். சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த கோகுலப் பெண் பாலெல்லாம் கீழே சிந்தியிருப்பதைப் பார்த்தாள். அவள் சுதாரிப்பதற்குள் தன் குழுவோடு சேர்ந்து சிட்டாய் பறந்தான் சின்னக் கண்ணன். அந்த குறும்புக் கள்ளன் நம்மை ரட்சிப்பானாக என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள்.

சுலோகம்:-
கைலாஸே நவனீததி க்ஷிதிரியம்ʼ ப்ராக்³ஜக்³த⁴ம்ருʼல்லோஷ்டதி
க்ஷீரோதோ³(அ)பி நிபீதது³க்³த⁴தி லஸத் ஸ்மேரே ப்ரபு²ல்லே முகே² .
மாத்ரா(அ)ஜீர்ணதி⁴யா த்³ருʼட⁴ம்ʼ சகிதயா நஷ்டா(அ)ஸ்மி த்³ருʼஷ்டா꞉ கயா
தூ⁴தூ⁴ வத்ஸக ஜீவ ஜீவ சிரமித்யுக்தோ(அ)வதான்னோ ஹரி꞉

“கலயோ வைஷ்ணவ மாயமோ…. யசோதா தேவிகானோ” என்று வியந்து போன யசோதம்மாவை கவி போத்தனா அழகாக வர்ணித்த கட்டத்தை லீலாசுகர் தன் தவச் சக்தியால் மிக உயர்ந்த பக்தியோடு அலங்கரித்துள்ளார் என்று எண்ணச் செய்கிறது மேற்கண்ட சுலோகம்.

பலராமன் யசோதையிடம், தம்பி மண் தின்றான் என்று கூறுவதையும், யசோதை விஷமம் செய்யும் புதல்வனை “கண்ணா! வீட்டில் வெண்ணைக்கும் பாலேட்டுக்கும் குறைவா என்ன? ஏன் மண்ணைத் தின்றாய்?” என்று அதட்டி வாயைத் திறக்கச் செய்வதையும், பால கிருஷ்ணனின் வாயில் சகல விஸ்வங்களையும் பார்த்து வியந்து போவதையும் பல கவிஞர்கள் வர்ணித்துள்ளனர்.

லீலாசுகர் யசோதை ஏன் ஆச்சர்யப்பட்டாள், எதனால் அச்சப்பட்டாள் என்பதை அழகாக வர்ணிக்கிறார்.

நந்தநந்தனின் வாயில் வெண்மையான கைலாச பர்வதத்தைப் பார்த்து வெண்ணை உருண்டை என்றும், பாற்கடலைப் பார்த்து தினமும் அருந்தும் பால் என்றும் நினைத்தாளாம். “யார் கண் பட்டதோ? என் பிள்ளைக்கு அஜீரணமாகி விட்டது” என்று தூ தூ என்று திருஷ்டி எடுத்தாளாம். “சிரஞ்சீவ! சிரஞ்சீவ!” என்று ரக்ஷை கட்டினாளாம்.

ஆகா! எத்தனை அழகிய கற்பனை! எத்தனை இயல்பான வர்ணனை!

தாய் பிள்ளைகளை உறங்கச் செய்வதற்கு கதை சொல்வதும் பிள்ளைகள் ‘ஊம்’ கொட்டியபடியே உறங்குவதும் தாய்மார்கள் அனைவரும் அறிந்ததே! யசோதையும் கிருஷ்ணனை தூங்கச் செய்வதற்கு இராமாயண கதையைச் சொல்கிறாளாம்.

“ராமன் என்ற ராஜா இருந்தான். அவனுக்கு சீதா என்ற மனைவி இருந்தாள். அவன் தந்தை அவனை மனைவியோடு காட்டிற்கு அனுப்பி விட்டாராம்” என்று அம்மா கூறும் கதையைக் கேட்டு கிருஷ்ணன் ‘ஊம்” கொட்டுகிறான். கதையை மேலும் சொல்லி, “ராமனும் சீதையும் பஞ்சவடி அருகில் வசித்து வருகையில் ராவணன் என்ற அரக்கன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான்” என்று கூறிய உடனே, “லட்சுமணா! எங்கே என் வில்? வில்லை எடுத்து வா!” என்றானாம். எத்தனை அழகிய கற்பனை!

லீலாசுகர் இது போன்ற பாலகிருஷ்ணனின் லீலைகளைக் தன் திவ்யமான பக்திக் கண்களால் பார்த்து தன்மயமானார். படிப்பவர்களையும் தன்மயத்தில் ஆழ்த்தினார்.

சுலோகம்:
ராமோ நாம ப³பூ⁴வ ஹும்ʼ தத³ப³லா ஸீதேதி ஹும்ʼ தௌ பிது-
ர்வாசா பஞ்சவடீதடே விஹரதஸ்தாமாஹரத்³ராவண꞉ .
நித்³ரார்த²ம்ʼ ஜனனீ கதா²மிதி ஹரேர்ஹுங்காரத꞉ ஶ்ருʼண்வத꞉
ஸௌமித்ரே க்வ த⁴னுர்த⁴னுர்த⁴னுரிதி வ்யக்³ரா கி³ர꞉ பாது ந꞉

இவ்விதமாக 300 சுலோகங்களில் பலவிதமான முத்திரைகளோடு நந்தநந்தனனின் சித்திரத்தை வரைந்து நமக்களித்துள்ளார் லீலாசுகர். ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருத்தத்தை அருந்திய பக்த ஜெய தேவர், நாராயண தீர்த்தர் போன்ற கவிஞர்கள் பலர் அதனை அனுசரித்து பால கிருஷ்ணனின் லீலைகளைப் பாடியுள்ளனர்.

மதுராவை வந்தடைந்தபின், அரசியல் நிபுணனாக மாறிய கம்ச சம்ஹாரனோ, துவாரகாதீசனோ, போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனை ஒரு சாக்காகக் கொண்டு உலகிற்கு கீதையை போதித்த ஜகத் குருவோ இவர் மனதில் இடம் பிடிக்கவில்லை. எட்டு மனைவியரோடு வாழ்ந்த அந்தப்புர நாயகனை விட பாமரர்களான கோப பாலகர்களோடும் ஆத்மார்ப்பணம் செய்து கொண்டு தன்னையே அனைத்துமாக எண்ணிய கோபிகளுடனும் சேர்ந்து ஆடிப் பாடி மாடுகளை மேய்த்து தெய்வீக லீலைகளை விளையட்டாகச் செய்து காட்டிய வெண்ணை திருடும் கண்ணனை மட்டுமே அவர் தியானம் செய்தார். அந்த சின்னக் கண்ணனே, நந்தகோபனின் செல்லப் பிள்ளையே இவருடைய ஆராதனைக்கு உரியவனானான்.

சுலோகம்:
முரலினினத³லோலம்ʼ முக்³த⁴மாயூரசூட³ம்ʼ
த³லிதத³னுஜஜாலம்ʼ த⁴ன்யஸௌஜன்யலீலம் .
பரஹிதனவஹேலம்ʼ பத்³மஸத்³மானுகூலம்ʼ
நவஜலத⁴ரநீலம்ʼ நௌமி கோ³பாலபா³லம்

“நௌமி கோபால பாலம்” என்ற மகுடத்தோடு ஸ்ரீகிருஷ்ண கர்ணா மிருதத்தில் உள்ள பால கோபாலனின் ரூப வர்ணனை ஓவியர்களுக்கும், நடிகர்களுக்கும் நாட்டியமணிகளுக்கும் உற்சாகத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை. முரளி கான லோலன், மயில் தோகை அணிந்தவன், துஷ்டர்களை அழித்தவன், லக்ஷ்மிக்குப் பிரியமானவன், மேக ஸ்யாமளன் என்று பலவித சிறப்பு அடை மொழிகளோடு பால கிருஷ்ணனை வர்ணிக்கும் பாக்களால் அர்ச்சித்தனர் புலவர்கள்.

சிராவண மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியான கிருஷ்ணாஷ்டமியை முன்னிட்டு பால கிருஷ்ணனின் லீலைகளை நினைத்து மகிழ்வது நம் வாழ்வை மேம்படுத்தும்.

(ராஜி ரகுநாதன் ஹைதராபாத்தில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி வல்லுனரான இவர் இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். ஆன்மீகக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகளையும் எழுதியும் வருகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே).

Source link

Leave a Reply

Your email address will not be published.