அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்


பௌத்த மத மாற்றம் – இந்து மதத்தில் இருந்து பெளத்தத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் வீட்டின் ஓர் அறையில் இருந்து இன்னொரு அறைக்குத்தான் சென்றிருக்கிறார். வீடு மாறிவிடவில்லை. ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்துக்குப் போவதுபோல, ஷியா முஸ்லிமிலிருந்து அஹ்மதியா முஸ்லிமாக மாறுவது போன்றதுதான் இது.

1935 வாக்கில் நான் இந்துவாக இறக்கமாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆனால், பின்னாளில் அனைவரையும் சமமாக மதிக்கும் நவீன மனு ஸ்ருதி (இந்திய அரசியல் சாசனம்) எழுதப்படும் என்பதையோ அதற்குத் தாமே தலைவராக நியமிக்கப்படுவோம் என்பதையோ அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

பட்டியலின மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவதை இலக்காகக் கொண்டவர் அதை பொதுவான அரசியல் சாசனத்தை உருவாக்கியதன் மூலம் சாத்தியப்படுத்திய பின்னர் அரைமனதாகவே பெளத்தத்துக்கு மாற முடிவு செய்தார்.

பெளத்தத்துக்கு மாறிய சிறிது காலத்துக்குள்ளாகவே உயிர் துறந்துவிட்டதால் பட்டியலின மக்கள் மத்தியில் அந்தக் கொள்கைகளை நிலைநிறுத்த பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்க முடியாமல் போய்விட்டது.

எனவே அவர் இந்தக் கொள்கைகளில் உறுதியாக இருந்திருப்பாரா மாட்டாரா என்ற கேள்விக்கும் பதில் பெற முடியாமல் போய்விட்டது.

அவருடைய பெளத்தம் என்பது உண்மையான பெளத்தம் அல்ல. நவாயணம் என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டார். அப்படியான ஒரு பெளத்த மதத்தை மரபான பெளத்த பிரிவினர் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மரபான பெளத்தம் என்பது இந்து மதத்துக்கு எப்படி எதிரானது அல்லது எப்படி அதன் நீட்சியாக இருக்கிறது என்றெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை.

இன்று அவர் முன்வைத்த புதிய பெளத்தத்தின் வழி நடப்பவர்கள் என்று பார்த்தால் அதிகபட்சமாக சில லட்சம்தான் இருப்பார்கள். மஹர் ஜாதியிலேயே அதைப் பின்பற்றாதவர்களே மிக அதிகமாக இருப்பார்கள்.

அந்த வகையில் பெளத்த மத மாற்றம் என்பது தோற்றுப் போன ஆன்மிக முயற்சிதான்.

அம்பேத்கரும் ஆன்மிகம் குறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டவர் இல்லை. அவருக்கு அரசியல் இலக்குகளே முக்கியமானதாக இருந்தன. ஆனால், அதிலும் அவர் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது.

நேருவிய காங்கிரஸ் அம்பேத்கரை முழுமையாக ஓரிரு தலைமுறை முழுவதும் இருட்டடிப்புதான் செய்திருந்தது.

அம்பேத்கரின் மிலிடண்ட் அரசியல் என்பது அவர் எழுதிய அரசியல் சாசனத்திலேயே அடிபட்டுப் போய்விட்டது. மிகவும் இணக்கமான சாசனத்தையே உருவாக்கியிருக்கிறார். அனைத்து ஜாதியினரும் அனைத்து மதத்தினரும் இந்தியர் என்ற உணர்வுடன் வாழ்ந்து வலிமையான இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசியல் சாசனத்தை உருவாக்கியிருக்கிறார்.

அவருடைய முந்தைய அரசியல் அணுகுமுறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பண்பட்டது. ஆதிக்க ஜாதியினருக்கு வேண்டியதை எழுதிவிட்டு என் பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அவர் சொன்னதை இந்த அர்த்தத்தில்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

பெளத்தத்துக்கு மதம் மாறியபோது 22 வாக்குறுதிகளை அம்பேத்கர் முன்மொழிந்திருந்தார். அவற்றைப் பார்க்கும்போது ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கிய விதிகள் போலவே அவை இருக்கின்றன.

கூறியது கூறல், தெளிவற்ற விதிகள், அதிகப்படியான விதிகள், மஹர்களுக்கு மட்டுமே சொன்னது போன்ற தொனி என அவை ஒரு முழுமையான மத உருவாக்க நோக்கம் கொண்டதாகவோ தேசம் தழுவியதாகவோ இல்லை.

அதிகபட்சமாக பத்து விதிகள் இருந்தாலே போதுமானது.

அவர் ஒரு தேர்ந்த வழக்கறிஞர். விதிகளை வகுப்பதில் வழக்கறிஞருக்கு இருக்கவேண்டிய மேதமை எதுவும் இந்த 22 விதிகளில் வெளிப்படவில்லை. அவர் நினைத்திருந்தால் அழுத்தமாக சுருக்கமாக வரையறுத்திருக்கமுடியும். ஆனால், அரசியல் சாசனம் உருவாக்கி பட்டியலின மக்களுக்கும் இந்தியர்களுக்கும் மிகப் பெரிய நன்மையைச் செய்துவிட்டிருக்கும் நிலையில் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சூளுரைத்ததை நிறைவேற்றவேண்டுமே என்று ஒப்புக்கு எழுதிவைத்திருக்கிறார்.

அவர் முன்வைத்த விதிகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் அது நன்கு புரியவரும்.

1) “நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் கடவுளாக ஏற்க மாட்டேன். அவர்களைக் கடவுளாக வணங்க மாட்டேன்.
வேத ஞான மார்க்கம் சொல்லும் நிர்குண பிரம்மத்தையே வழிபடலாம் அப்படித்தானே.

2) இராமனையோ, கிருஷ்ணனையோ கடவுளாக நான் நம்பமாட்டேன். அவர்களைக் கடவுளாக வழிபடவும் மாட்டேன்.
கூறியது கூறல். வழிபடமாட்டேன் என்று சொன்னாலே நம்ப மாட்டேன் என்றுதான் அர்த்தம். நம்ப மாட்டேன் என்று சொன்னாலே வழிபடமாட்டேன் என்று தான் அர்த்தம்.
ராமன், கிருஷ்ணன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது அவசியமில்லாதது. விஷ்ணு வேறு; அவருடைய அவதாரங்கள் வேறு என்பதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறதென்றால் விஷ்ணுவின் ஏராளமான அவதாரங்கள், வடிவங்கள் உண்டு. இந்த இரண்டைத் தவிர பிறவற்றை வணங்குவார்களா? வணங்கலாமா?

3) கவுரியையோ, கணபதியையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களையும் பிற இந்து கடவுள்களையும் வழிபடவும் மாட்டேன்.
மஹர்களைத் தவிர்த்த பிற பட்டியல் ஜாதியினரின் குல தெய்வங்களைத் தாராளமாக வணங்கலாமா. சூரியனை வணங்கலாமா. குறிப்பாக முருகனை வணங்கக்கூடாது என்று சொல்லவில்லையே.

இவர்கள் இந்து தெய்வங்கள் என்ற பிரிவுக்குள் வருவார்களென்றால் பட்டியலினத்தினர் இந்துக்கள் இல்லை என்று முதலில் சொன்னது பொய்தானே.

அதோடு இந்த மூன்று விதிகளையும் ஒரே விதியாக இந்து தெய்வங்களை வணங்கமாட்டேன் என்று ஒரே விதியாக எளிமையாக முடித்திருக்கலாம். கொஞ்சம் விளக்கம் தேவையென்றால் முழுமையாகச் சொல்லியிருக்கவேண்டும். கெளரியை மட்டுமே கூறியிருக்கிறார். அப்படியென்றால் லட்சுமி, சரஸ்வதியைக் கும்பிடலாமா..? அதுதான் பிற இந்து கடவுள்கள் என்றுசொல்லியிருக்கிறாரே என்றால் அதுவே முழுவதும் போதுமானதாக இருக்குமே. ஒன்றைச் சொல்லி ஒன்றை விடுவதால்தானே கேள்வி எழுகிறது.

தனித்துச் சொல்வதென்றால் அனைத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இல்லையென்றால் பொதுவாகச் சொல்லிவிட்டிருந்தாலே போதுமானது.

அவருக்கு மஹர் மத்தியில் மட்டுமே ஆதரவு இருந்ததால் அதை மட்டுமே சொல்லியிருக்கிறார். அது தேசத்தின் பிற பட்டியலினத்தினரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத போக்குதான். அவருடைய காலத்தில் அவருக்கு மஹர்களைத் தாண்டி செல்வாக்கு இல்லை என்பதால் அப்படிச் செய்திருக்கக்கூடும். ஆனால் அது தவறு.

4). கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தெளிவான விதிதான்.

5) புத்தரை, விஷ்ணுவின் அவதாரம் என்பது பொய் மற்றும் விஷமத்தனமான பிரச்சாரம்.
தெளிவான விதிதான். ஆனால் புத்த மதத்துக்கு மாறினாலும் பல விதிகளில் இந்து அம்சங்களையே பின்பற்றியிருப்பதால் எந்த நேரத்திலும் இந்து மதத்துக்கு இவர்கள் திரும்பிவிடக்கூடும் என்று பயந்து இதைச் சொல்லியிருக்கிறார்.

6) சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் வைப்பது – பிண்ட தானம் கொடுப்பது ஆகிய செயல்களில் எப்போதும் ஈடுபடவே மாட்டேன்.
உண்மையில் இறந்தவருக்கான நினைவுச் சடங்குகள் எல்லாம் இந்து மதத்துக்கும் முந்தையவை. இவை இன்று பிராமணர்கள் செய்துவைக்கும் சடங்காக இருப்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவுக்கு அனைத்து மக்களின் எளிய நம்பிக்கையாகவும் இருக்கிறது. எனவே பிராமண புரோகிதர்களை வைத்து செய்யவேண்டாம் என்று சொல்லியிருக்கவேண்டும்.

7) பௌத்தத்துக்குக் கேடு விளைவிக்கும் எச்செயலிலும் ஈடுபடமாட்டேன்.
ஒரு மதத்துக்கு வந்தவர்களிடம் அந்த மதத்துக்கு எதிராக நடக்காதே என்று தனியே சொல்லத் தேவையே இல்லை.

8) பிராமணர்கள் செய்ய வேண்டிய எந்த சடங்குகளையும் நான் செய்ய மாட்டேன்.
அப்படியானால் பிற ஜாதி பூசாரிகள், அருள் வாக்கு கூறுபவர்கள் மூலம் செய்துகொள்ளலாம் என்று அர்த்தம் வருகிறது. இதை அவர் ஏற்றுகொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. எனவே இந்த விதி தெளிவாக இல்லை.

9) எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்று நம்புகிறேன்.
புத்தரே நம்பவில்லை. பெண்களை ஆணுக்குக் கீழாகவே அவருடைய மடாலய விதிகளில் வகுத்திருக்கிறார். 90 வயது பிக்குணியாக இருந்தாலும் இன்றுதான் மடாலயத்தில் சேரும் ஆண் சொல்வதைக் கேட்டே நடக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார். துறவை ஏற்பவர்களுக்குள் மட்டுமே சமத்துவம் என்றார். மாட்டுக்கறி தின்பவரையும் மாட்டுக்கறி தின்னாதவரையும் ஒரே மாதிரி நடத்து என்று அவர் சொல்லவில்லை. குடிகாரனையும் குடிக்காதவரையும் ஒரே மாதிரி நடத்து என்று சொல்லவில்லை. திருடனையும் பொய் சொல்பவனையும் பெண்கள் விஷயத்தில் தவறு செய்பவனையும் ஊழல் செய்பவனையும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவனையும் இரட்டை வேடம் போடுபவனையும் தன் ஆதாயத்துக்காக ஒருத்தனின் காலைப் பிடித்துக் கிடந்துகொண்டு எளியவர்களைப் பார்த்து கலகம் செய், அத்துமீறு என்று சொல்பவனை எல்லாம் அதைச் செய்யாதவர்களுக்கு இணையாக நடத்து என்று சொல்லவில்லை.

10) நான் சமத்துவத்தை நிலைநாட்ட அயராது உழைப்பேன்.
11) புத்தர் வகுத்து கொடுத்த எண்வழி மார்க்கப் பாதையில் பயணிப்பேன்.
12)புத்தர் கூறியபடி முழு நிறைவாக்கும் பத்து நல்லொழுக்கங்களை தவறாது கடைபிடிப்பேன்.
13) எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்தோடும், அன்போடும் இருப்பேன்.
14) நான் திருட மாட்டேன்.
15) நான் பொய் சொல்லமாட்டேன்.
16) நான் பாலியல் தொடர்புடைய தவறுகளில் ஈடுபட மாட்டேன்.
17) நான் மது அருந்த மாட்டேன்.
18) பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான மெய்யறிவு, அறநெறி, கருணை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்வேன்.

9-லிருந்து 18 வரையான அனைத்துமே பஞ்ச சீலம், அஷ்ட மார்க்கம், தச சீலம் என்ற பெளத்த விதிகளுள் அடங்கிவிடும். தனித்தனியாகச் சொல்லத் தேவையே இல்லை.

என் சாராயம் என் உரிமை; என் தட்டு என் மாட்டுக்கறி என்று திமிறும் தலித் அடிப்படைவாதிகள் அனைவரையும் அம்பேத்கர் இன்றிருந்தால் தலையில் கல்லைப் போட்டே கொன்றிருப்பார். அல்லது இவர்கள் அதைச் செய்திருப்பார்கள்.

19)சமத்துவமின்மையையே அடிப்படையாக கொண்டு மானுடத்துக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் மானுட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ள இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்.

ஆனால், அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும்.

20) பௌத்தமே சரியான நன்னெறி என நான் முழுமையாக நம்புகிறேன்.

21) பௌத்தத்தை உளமார ஏற்றதால் நான் மறு பிறப்பெடுக்கிறேன்.
மறு பிறவி பற்றி அம்பேத்கருக்கு நம்பிக்கை உண்டா?

22) இன்று முதல் புத்தருடைய கருத்துக்கள் வழி வாழ்வேன் என்று சூளுரைக்கிறேன்.

கடைசி மூன்று அப்பட்டமான கூறியது கூறல்.

மெய்யறிவுத் தேடலும் நல்லொழுக்கமும் உயிர்க் கருணையும் கொண்ட ஆன்மிகவாதிகளாக வாழவேண்டும் என்ற உயரிய லட்சியம் அவரிடம் இருந்தது.

பட்டியலினத்தினருக்கு அதை முன்வைக்க அவருக்கு ஏனோ தயக்கமும் இருந்திருக்கிறது. ஏனென்றால் இந்த விழுமியங்கள் எல்லாம் அவர் பிராமணியம் என்று பழித்த சனாதனத்தின் ஆதாரமான கோட்பாடுகள்.

ஜாதி, குலத் தொழில் ஆகிய இரண்டை மட்டுமே அவர் சனாதனத்தின் வேர்களாகச் சொன்னார். நவீன காலத்தில் அவர் கண் முன்பாகவே அவை இந்து மதத்தால் மிக எளிதில் கைவிடப்பட்டுவிட்டன.

இன்னும் சொல்லப் போனால் தொழில் புரட்சி ஏற்பட்டு காலனிய ஆதிக்கம் உலகில் ஏற்பட ஆரம்பித்த்தைத் தொடர்ந்தே உலகம் முழுவதிலும் இருந்த குலத் தொழில் மறைய ஆரம்பித்துவிட்டது. இந்துஸ்தானிலும் அப்படியே நடந்தேறிவிட்டது.

தன்னைப் பெருமளவில் மாற்றிக்கொண்டுவிட்ட இந்து மதத்தில் அவர் செய்யவேண்டிய சீர்திருத்தம் என்பது எதுவுமே இருந்திருக்கவில்லை. அரசியல் சாசனத்தில் உருவாக்கியதைவிட வேறு எதுவும் செய்யவேண்டிய அவசியமும் இருந்திருக்கவில்லை. கிறிஸ்தவ இஸ்லாமுக்கு மாறும் மாபெரும் தவறையும் அவர் செய்ய விரும்பியிருக்கவில்லை.

அம்பேத்கரின் மகத்தான சாதனை என்பது பட்டியலினத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது என்று சொல்வதுண்டு. பலருடைய பங்களிப்பு இதில் உண்டு என்றாலும் அவருக்குக் கூடுதல் பாராட்டைக் கொடுப்பது மிகவும் நியாயமானதுதான். ஆனால், இந்துவாக இருக்கும்வரைதான் அந்த இட ஒதுக்கீடு சலுகைகள் உண்டு என்றும் அவரே தெளிவாக வரையறுத்திருக்கிறார். பெளத்தத்துக்கு மாறினாலும் உண்டு என்றுகூட சொல்லவில்லை. எனவே

பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான். இன்று அந்த ஒன்றுமில்லை என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லாத அளவுக்கு ஒன்றுமில்லாததாகவே ஆகிவிட்டிருக்கிறது.

ஜெய் இந்தியா! இதுதான் அம்பேத்கரின் அரசியல். இதில் ஜெய் பெளத்தம் என்பதற்கு சொற்ப இடம் தான் இருக்கிறது.

அரசியல் சாசனம் வகுத்தவர் என்ற அளவில் அவர் ஒரு ஹீரோ.

பெளத்ததுக்கு மாறியவர்/மாறச் சொன்னவர் என்ற அளவில் அவர் அப்படியல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு பெளத்த மத மாற்றமே இணக்கமானது என்ற முடிவை எடுத்தவகையில் பாராட்டுக்குரியவர். ஆனால் பெளத்தம் பற்றி அவரும் சீரியஸாக எடுக்கவில்லை. தலித் அடிப்படைவாதிகளும் சீரியஸாக எடுக்கவில்லை.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *